‘உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்’ மாநில தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு


‘உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்’ மாநில தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு
x
தினத்தந்தி 14 Dec 2019 10:29 PM GMT (Updated: 14 Dec 2019 10:29 PM GMT)

உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த கோரி மாநில தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை, கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மற்றும் தி.முக. நிர்வாகிகள் சிலர் நேற்று சென்று உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முறையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. 9 மாவட்டங்களில் சரிவர வார்டு வரையறை செய்யப்படவில்லை என்பதால், அதற்குரிய தேர்தலை நடத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை ஊடகங்கள் தெளிவாக வெளியிடவில்லை. அரசும் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை.

மீதம் உள்ள 27 மாவட்டங்களில், மனுதாரராகிய தி.மு.க. வைத்த கோரிக்கைகளை ஏற்று, இன்னென்ன வழிகளில் தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது. அது தான் தீர்ப்பு.

அவமதிப்பு வழக்கு

முதல்-அமைச்சர், சட்ட அமைச்சர் உள்பட பலர் இந்த வழக்கில் தி.மு.க. தோற்றுவிட்டது போல ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கி உள்ளார்கள். வழக்கு நீக்கம் என்றால் தள்ளுபடி என்ற வார்த்தை வந்து இருக்கும். அல்லது நிராகரிக்கப்பட்டது என்று வந்திருக்கும். ஆனால் அப்படி எந்த வாசகமும் தீர்ப்பில் குறிப்பிடப்படாமல், அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுரை கூறியபடி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஆனால் அமைச்சர்கள் தவறாக பேட்டி கொடுத்தனர். சிக்கலான பிரச்சினையாக இருப்பதால் தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெளிவு படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் எங்கள் தீர்ப்பு தெளிவாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. அதை புரிந்து கொண்டு அவர்கள் செயல்படாவிட்டால், சட்டரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது. அதை தான் மனுவாக தயாரித்து அளித்து உள்ளோம். இதை பின்பற்றாவிட்டால் தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story