மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில்கண்ணும் கருத்துமாக உழைத்தால் தான் வெற்றி நம் கைகளுக்கு வரும்தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் + "||" + MK Stalin's letter to volunteers

உள்ளாட்சி தேர்தலில்கண்ணும் கருத்துமாக உழைத்தால் தான் வெற்றி நம் கைகளுக்கு வரும்தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

உள்ளாட்சி தேர்தலில்கண்ணும் கருத்துமாக உழைத்தால் தான் வெற்றி நம் கைகளுக்கு வரும்தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
உள்ளாட்சி தேர்தலில் கண்ணும், கருத்துமாக உழைத்தால் தான் வெற்றி நம் கைகளுக்கு வரும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி தேர்தல்

ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்தில், தி.மு.க. என்றைக்குமே மக்களைச் சந்திக்கத் தவறியதுமில்லை, தயங்கியதுமில்லை. வெற்றி தோல்வியைக் கடந்து, தேர்தலை நாடி எதிர்கொள்கின்ற உண்மையான ஜனநாயக இயக்கம் தி.மு.க.. அதுவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை உரிய காலத்தில் திறம்பட நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை தி.மு.க. ஆட்சி போல பலப்படுத்திய அரசு தமிழகத்தில் வேறு கிடையாது.

தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டிருந்தாலும்; நேரடித் தேர்தலுக்குப் பதில் மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம், 9 மாவட்டங்களை புதியதாக உருவாக்கி அங்கு இடஒதுக்கீடு, மறுவரையறை செய்யாதது, ஊரக ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல், என்றெல்லாம் அ.தி.மு.க. அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தின. இந்தக் குழப்பங்கள் நீக்கப்பட்டு, ஜனநாயக நெறிமுறைகளின்படியும், அரசியல் சட்டம் உருவாக்கியுள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படியும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், உச்சநீதிமன்றத்தை தி.மு.க. அணுகியது.

வியூகம் அமைக்க வேண்டும்

அ.தி.மு.க. அரசு எத்தனை அத்துமீறல்கள் செய்திட நினைத்தாலும், மாநில தேர்தல் ஆணையத்துடன் சூழ்ச்சிகரமான கூட்டணி அமைத்துக்கொண்டு முறைகேடுகளுக்கு வழி வகுத்தாலும், மக்களின் பேராதரவு தி.மு.க.விற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமே இருக்கிறது.

அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் தேர்தலை நடத்திடத் துடிக்கும் அதிகார அடிமையான அ.தி.மு.க. அரசுக்கு, தக்க பாடம் புகட்டிட தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எத்தனை கட்டமாக தேர்தலை நடத்தினாலும், அத்தனை கட்டத்திலும், அ.தி.மு.க. அடையப்போவது தோல்விதான்; தோல்வி தவிர வேறல்ல. மக்கள் எழுதி வைத்திருக்கும் மகத்தான இந்தத் தீர்ப்பினை, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் தெளிவாக உணர்ந்துகொண்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தை சந்தித்திட ஆக்கபூர்வமான வியூகம் வகுத்திட வேண்டும்.

கண்ணும் கருத்துமாக...

கடந்த மூன்று நாட்களாக நான் மாவட்ட செயலாளர்களிடம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடர்ந்து கலந்து பேசி வருகிறேன். தற்போது வரை, 11 மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் நமது கூட்டணிக் கட்சிகளுடன் பேசி உடன்பாடு ஏற்பட்டு, அதன் விளைவாக பட்டியலை தங்கள் மாவட்டக் தி.மு.க.வின் மூலம் வெளியிட்டு விட்டோம் என்று சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். மற்ற மாவட்டங்களும் தோழமைக் கட்சியினருடன் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையினை தொடர்ந்து மேற்கொண்டு, சுமுகமான உடன்பாடு கண்டிட வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன்.

தி.மு.க. சார்பில் போட்டியிடக்கூடிய இடங்களில், மக்கள் நலனில் மிகுந்த அக்கறையும் மேலான வெற்றிவாய்ப்பும் உள்ள, அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்திருக்கும் வேட்பாளர்களை களமிறக்கிட வேண்டும். தி.மு.க.வின் அடி முனையில் ஆர்வமுடன் காத்திருக்கும் தொண்டர்களையும் அரவணைத்து, தோழமைக் கட்சியினரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு வாக்காளரின் உறுதியான நம்பிக்கையையும் பெற்றிடும் வகையில் கண்ணும் கருத்துமாக உழைத்திட்டால்தான், வெற்றி நம் கைகளுக்கு வரும்.

வெற்றிப்பரிசு

நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் இனிப்பான வெற்றிப் பரிசும், இடைத்தேர்தல் களம் தந்துள்ள கசப்பான பாடமும் மறக்க முடியாதவை; மறக்கக்கூடாதவை. கடந்தகால வெற்றியாயினும் தோல்வியாயினும் அது தரும் படிப்பினைகளை நுணுக்கமாகக் கற்றறிந்து கொள்ள வேண்டும். அலட்சியம் துளியுமின்றி, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் முழுமையாகப் பெறுவதன் மூலம்தான், நம் வெற்றியின் இலக்கை அடைந்திட முடியும்.

சூதுமதியாளர்களாம் அதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும்போது, விரைவில் தமிழ்நாட்டில் அவர்களுக்கான நல்லாட்சி அமையப் போகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். என்றும் நாம் மக்கள் பக்கம் நிற்போம்; எல்லா இடங்களிலும் வெற்றிக் களம் காண்போம்! வீணர்தம் கொட்டம் அடக்குவோம்; விவேகமும் வேகமும் நிறைந்த பணியை விரைந்தாற்றுவோம்!

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.