சென்னையில் இணையதள மையங்களில் போலீசார் அதிரடி சோதனை


சென்னையில் இணையதள மையங்களில் போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 24 Dec 2019 1:08 PM GMT (Updated: 2019-12-24T18:38:31+05:30)

சென்னையில் இணையதள மையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை,

இந்திய அளவில் தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் தான் குழந்தைகள் ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்படுகிறது.

இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, தவறான வழியில் செல்லும் இளம் வயதினர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலமே முடியும் என்ற நோக்கத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகளின் ஆபாசப்படங்கள் பார்ப்பதில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த வகை ஆபாச படம் பார்ப்பவர்களின் 3000 பேர் கொண்ட பட்டியல் தயாராக உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கூடுதல் டிஜிபி  ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், சென்னை சூளைமேட்டில், குழந்தைகள் ஆபாச படத்தை ஐபேடில் டவுன்லோடு செய்து வைத்திருந்த 72 வயது நபர் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள  இணையதள மையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

குழந்தைகளின் ஆபாச படம் அனுப்புபவர்களின் ஐ.பி. முகவரி குறித்து  பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார்  சோதனையிட்டனர். மேலும், இணையதள மையங்களில் சோதனை  மேற்கொண்ட போலீசார், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தனர். சோதனை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story