இந்தியாவில் சாலை விபத்துகளை குறைக்க பொதுப்போக்குவரத்தை வலுப்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


இந்தியாவில் சாலை விபத்துகளை குறைக்க பொதுப்போக்குவரத்தை வலுப்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Dec 2019 9:00 PM GMT (Updated: 2019-12-26T01:28:56+05:30)

இந்தியாவில் சாலை விபத்துகளை குறைக்க பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

இந்தியாவில் சாலை விபத்துகளை குறைக்க பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அக்கறை செலுத்துவது இல்லை

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ள உண்மைகள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. கார்கள் மற்றும் பஸ்களில் செல்வோரின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையை சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பில் மத்திய அரசு காட்டுவதில்லை என்று ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இந்தியாவின் போக்குவரத்துக் கொள்கையும், அணுகுமுறையும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம் ஆகும். இந்த தவறான நம்பிக்கை காரணமாக சாலைகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசுகள், கார் வாங்க முடியாமல் இருசக்கர வாகனங்களிலும், சைக்கிள்களிலும் பயணிப்போரின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவது இல்லை.

பொதுப் போக்குவரத்து

வாகனங்களுக்கு ஆதரவான கொள்கையால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் எதுவும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. பொதுப்போக்குவரத்துக்குதான் வளர்ந்த நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவில் மட்டும்தான் பொருளாதார வலிமைமிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதே அணுகுமுறை நீடித்தால் இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும் விபத்து உயிரிழப்புகள் குறையாது.

இந்தநிலையை மாற்றி இந்தியாவை சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் குறைந்த நாடாக மாற்ற வேண்டும். இதற்காக சாலைகளில் இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள் ஆகியவற்றுக்கு தனித்தனி தடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். அதிவிரைவு பஸ் பாதைகள் அமைக்கப்படுவதுடன், பொதுப் போக்குவரத்து வலுப்படுத்தப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story