27 மாவட்டங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது நாளை ஓட்டுப்பதிவு


27 மாவட்டங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது நாளை ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 26 Dec 2019 12:15 AM GMT (Updated: 2019-12-26T03:55:08+05:30)

27 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

சென்னை, 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களும் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட 91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இதற்காக, 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. பெறப்பட்ட வேட்புமனுக்களில் 3 ஆயிரத்து 643 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்குப்பின் நிராகரிக்கப்பட்டன. மேலும் 48 ஆயிரத்து 891 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் இறுதிப்போட்டியில் தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்கள் தங்கள் பிரசாரத்தை நேற்று மாலை 5 மணியுடன் முடித்துக் கொண்டனர்.

இதில் முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.

முதல் கட்ட தேர்தலில் வாக்களிப்பதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 4 பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

இதை தமிழகத்தில் மாநில தேர்தல் ஆணையம் முன்னோடி திட்டமாகக் கொண்டு 114 வாக்குச்சாவடிகளில் செயல்படுத்த உள்ளது.

ஏனைய பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவிற்கு சுமார் 1 லட்சத்து 83 ஆயிரத்து 959 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவை கண்காணிப்பார்கள். வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு பறக்கும் படைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவை நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடத்துவதற்காக 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Next Story