அனுமதியின்றி பேரணியாக சென்ற வழக்கு: கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் ஆஜர் ஆகவில்லை திருமாவளவன் ஆஜர்; குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது


அனுமதியின்றி பேரணியாக சென்ற வழக்கு: கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் ஆஜர் ஆகவில்லை திருமாவளவன் ஆஜர்; குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 26 Dec 2019 10:15 PM GMT (Updated: 26 Dec 2019 7:53 PM GMT)

அனுமதியின்றி பேரணியாக சென்ற வழக்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை சிறப்பு கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.

சென்னை,

அனுமதியின்றி பேரணியாக சென்ற வழக்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை சிறப்பு கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. திருமாவளவன் நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த 5.4.2018 அன்று முழு அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. அழைப்பு விடுத்தது.

அன்றைய தினம் சென்னையில் ஆங்காங்கே நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிம்சன் பகுதியில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள், அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதன்பின்பு, அங்கிருந்து மெரினா கடற்கரை நோக்கி பேரணியாக சென்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

போக்குவரத்துக்கு இடை யூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், அனுமதியின்றி பேரணியாக சென்றதாகவும் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் நடிகர் சரத்குமார், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், காதர் முகைதீன் ஆகிய 7 பேர் மீதும், போராட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் உள்பட 7 பேர் மீதும் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்பட 7 பேரும் ஆஜராக சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது.

நேற்று அந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்.திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். மு.க.ஸ்டாலின் ஆஜராகவில்லை.

வழக்கு விசாரணை தொடங்கியதும் கராத்தே தியாகராஜன், மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் ஆஜராகாதது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வக்கீல் குமரேசன் உள்ளிட்ட தி.மு.க. வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், ‘மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை சம்மன் வழங்கப்படவில்லை. சம்மன் வழங்காமல் எப்படி அவர் ஆஜராக முடியும்?’ என்று கேள்வி எழுப்பினர்.

இந்த விவாதத்தால் சிறிது நேரம் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின்பு, தொல்.திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் தரப்பில் அவரது வக்கீல் சம்மனை பெற்றுக்கொண்டதால், அவரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர், வழக்கு விசாரணை ஜனவரி 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதேபோன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த மற்றொரு போராட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் உள்பட 5 பேர் மீது தொடரப்பட்ட வழக்கும் அதே கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தொல்.திருமாவளவன், வீரபாண்டியன் ஆகியோர் ஆஜராகினர். இதன்பின்பு, இந்த வழக்கும் ஜனவரி 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Next Story