கொள்ளையடித்த பணத்தில் பங்கு : கொள்ளையன் முருகன் பகீர் வாக்குமூலம்..? 2 போலீசாருக்கு சம்மன்


கொள்ளையடித்த பணத்தில் பங்கு :  கொள்ளையன் முருகன்  பகீர் வாக்குமூலம்..? 2 போலீசாருக்கு சம்மன்
x
தினத்தந்தி 31 Dec 2019 7:02 AM GMT (Updated: 31 Dec 2019 7:02 AM GMT)

கொள்ளையடித்த பணத்தில் பங்கு கொடுத்ததாக கொள்ளையன் முருகன் வாக்குமூலத்தின் அடிப்படையில் 2 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

சென்னை

திருச்சியில், வங்கியொன்றில் கொள்ளையடித்த பணத்தில், சுமார் 20 லட்ச ரூபாயை 2 போலீஸ்காரர்களுக்கு லஞ்சமாக கொடுத்ததாக கொள்ளையன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தபட்ட 2 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி சுவற்றை துளையிட்டு, 450 சவரன் நகைகள், 19 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் முருகன், சுரேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இவர்களில், சுரேஷ் மற்றும் முருகனை காவலில் எடுத்து, திருச்சி சமயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொள்ளையன் முருகன் அளித்த வாக்குமூலத்தில், சென்னையில், அவன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும், அதனை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் விசாரித்து வந்ததாக கூறியதாகவும், போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிப்பதற்காக, திருச்சி சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த பணத்தை, சென்னையில் தற்போது பணியாற்றும் காவல் ஆய்வாளர் ஒருவரிடமும், தலைமைக் காவலர் ஒருவரிடமும், லஞ்சமாக கொடுத்ததாக, கொள்ளையன் முருகன் வாக்குமூலம் அளித்திருப்பதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து முருகன் அளித்த வாக்குமூலத்தின்படி சென்னை மாநகர காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர் ஜோசப் ஆகியோர் வரும் 3ம் தேதிக்குள் ஆஜராக வேண்டுமென்று சமயபுரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Next Story