உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடிப்பதாக தி.மு.க. தொடர்ந்த அவசர வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடிப்பதாக தி.மு.க. தொடர்ந்த அவசர வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Jan 2020 11:07 PM GMT (Updated: 2 Jan 2020 11:07 PM GMT)

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடிப்பதாக தி.மு.க. தொடர்ந்த வழக்குக்கு, பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அவசர வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில், ‘ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டது. இதில் தி.மு.க. வேட்பாளர்கள் பலர் அதிக ஓட்டுக்களை பெற்று, வெற்றி பெற்றும், அவர்களது வெற்றியை அறிவிக்காமல் தேர்தல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர்.

இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

ஆணையம் விளக்கம்

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியிடம், மனுதாரர் தரப்பு வக்கீல்கள் முறையிட்டனர். இதையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மூத்த நீதிபதி எம்.சத்திய நாராயணனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி, இந்த வழக்கை நேற்று இரவு 8.45 மணிக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரிக்க தொடங்கினார். விசாரணை இரவு 10.40 மணிக்கு முடிந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதாடினார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ‘உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பணி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்குள் முடிந்து விடும்’ என்று வாதிட்டார்.

பதில் மனு

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், ‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதில், எந்த முறையில் ஓட்டுகள் எண்ணப்படுகிறது?

அவற்றை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்தது, தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு என்று அனைத்து விவரங்களையும், ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டார்.

Next Story