‘நீட்’ தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பம் தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்


‘நீட்’ தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பம் தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 14 Jan 2020 8:00 PM GMT (Updated: 14 Jan 2020 7:33 PM GMT)

‘நீட்’ தேர்வை எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேரும், தமிழகத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

சென்னை, 

‘நீட்’ தேர்வை எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேரும், தமிழகத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

‘நீட்’ தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு எழுதுபவர்கள் அதற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, கடந்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தெரிவித்தது. முதலில் கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த 6-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. தேர்வு கட்டணத்தையும் விண்ணப்பதாரர்கள் செலுத்திவிட்டனர்.

15 லட்சத்து 93 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அந்த வகையில், நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு எழுதுவதற்கு 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத இருக்கின்றனர். இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்ய இன்று (புதன்கிழமை) முதல் 31-ந் தேதி வரை வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 27-ந் தேதி வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ‘நீட்’ தேர்வு மே மாதம் 3-ந் தேதி மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story