தமிழ் புத்தாண்டு விருது பெறுவோர் பட்டியல் தமிழக அரசு வெளியிட்டது


தமிழ் புத்தாண்டு விருது பெறுவோர் பட்டியல் தமிழக அரசு வெளியிட்டது
x
தினத்தந்தி 14 Jan 2020 7:45 PM GMT (Updated: 14 Jan 2020 7:44 PM GMT)

தமிழ் புத்தாண்டு விருதுகள் பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை, 

தமிழ் புத்தாண்டு விருதுகள் பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

புத்தாண்டு விருதுகள்

2019-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டுக்கான விருதுகள் (மொத்தம் 10), 2018-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் 2019-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க (3 விருதுகள்) விருதுகளும் வழங்கப்பட வேண்டியுள்ளதாக தமிழ் வளர்ச்சி இயக்குனர் அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

மேலும், விருதுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்களையும், அமைப்புகளின் பெயர்களையும் அவர்களது சுயவிவர குறிப்புகளுடன் அனுப்பி, விருது பெறுவோரை தேர்வு செய்து ஆணை வெளியிடும்படி கேட்டுக்கொண்டார்.

தமிழ்த்தாய் விருது

தமிழ்த்தாய் விருது பெறும் ஒரு அமைப்புக்கு மட்டும் ரூ.5 லட்சம், நினைவுப் பரிசு, கேடயம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பொன்னாடையும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுபெறும் 10 பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.

மற்ற விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாயும், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, காசோலை பேழை மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். உலகத் தமிழ்ச்சங்க விருதுகளில் இலக்கிய, இலக்கண, மொழியியல் விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் தகுதியுரை, காசோலை பேழை, பொன்னாடை வழங்கப்படும்.

விருது பெறுவோர் பட்டியல்

இந்த விருது பெறுவோரின் பட்டியல் வருமாறு:-

தமிழ்த்தாய் விருது (2019) - சிகாகோ தமிழ்ச் சங்கம்; கபிலர் விருது - புலவர் வெற்றியழகன்; உ.வே.சா. விருது - வே.மகாதேவன்; கம்பர் விருது - சரசுவதி ராமநாதன்; சொல்லின்செல்வர் விருது - கவிதாசன்; ஜி.யு.போப் விருது - மரியஜோசப் சேவியர்; உமறுப்புலவர் விருது - லியாகத் அலிகான்; இளங்கோவடிகள் விருது - ஞானச்செல்வன் என்ற கோ.திருஞானசம்பந்தம்; அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து;

சிங்காரவேலர் விருது - அசோகா சுப்பிரமணியன்; மறைமலையடிகளார் விருது - புலவர் ப.முத்துக்குமாரசுவாமி; அயோத்திதாச பண்டிதர் விருது - புலவர் வே.பிரபாகரன்; முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது (2018) - த.நாகராசன்; சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது - சா.முகம்மது யூசுப் உள்ளிட்ட 10 பேர்;

உலக தமிழ்ச் சங்க விருதுகளான 3 இலக்கிய விருதுகள் - மலேசியா பெ.ராசேந்திரன்; இலக்கண விருது - பிரான்ஸ் முத்து கஸ்தூரிபாய்; மொழியியல் விருது - இலங்கை சுபதினி ரமேஷ்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story