பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் படையெடுப்பு: சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் பயணம் ரெயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது


பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் படையெடுப்பு: சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் பயணம் ரெயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 14 Jan 2020 10:00 PM GMT (Updated: 14 Jan 2020 9:21 PM GMT)

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளனர்.

சென்னை, 

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து பஸ்களில் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளனர். ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தினந்தோறும் இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பஸ்களுடன் சிறப்பு பஸ்களாக 4 ஆயிரத்து 950 பஸ்கள் என சென்னையில் இருந்து 16 ஆயிரத்து 75 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து 14 ஆயிரத்து 45 பஸ்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல பிற ஊர்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்களை சேர்ந்து தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்து 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திட்டமிட்டப்படி கடந்த 12, 13-ந்தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு, மக்கள் அதன்மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

கட்டுக்கடங்காத கூட்டம்

இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகளை தவிர, மற்ற பயணிகளுக்கு வரிசை அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டது. பஸ்களின் விவரம், புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்களை ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்த வண்ணம் இருந்தனர்.

8 லட்சம் பேர் பயணம்

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் ஆயிரம் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து கடந்த 10-ந்தேதி முதல் நேற்று வரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம் சுமார் 8 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அரசு பஸ்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 632 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். அதன்மூலம் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 கோடியே 80 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது.

ரெயில்களில் அலைமோதிய பயணிகள்

பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர வசதியாக 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 4 ஆயிரத்து 500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 9 ஆயிரத்து 370 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பஸ் நிலையங்கள் போலவே ரெயில் நிலையங்களிலும் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், பாண்டியன், வைகை, ராமேசுவரம் உள்ளிட்ட ரெயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து ஏறி சென்றனர். இதனால் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் முழுவதும் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்தது.

Next Story