ராமர், சீதை படம் மீது பெரியார் ஊர்வலத்தில் செருப்பு வீசப்பட்டதா? ரஜினிகாந்த் கருத்துக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு பச்சை பொய் என்று கருத்து


ராமர், சீதை படம் மீது பெரியார் ஊர்வலத்தில் செருப்பு வீசப்பட்டதா? ரஜினிகாந்த் கருத்துக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு பச்சை பொய் என்று கருத்து
x
தினத்தந்தி 16 Jan 2020 10:15 PM GMT (Updated: 16 Jan 2020 9:44 PM GMT)

1971-ல் பெரியார் நடத்திய பேரணியில் ராமர், சீதை படம் மீது செருப்பு வீசப்படவில்லை என்றும், அது பச்சை பொய் என்றும் திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

1971-ல் பெரியார் நடத்திய பேரணியில் ராமர், சீதை படம் மீது செருப்பு வீசப்படவில்லை என்றும், அது பச்சை பொய் என்றும் திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் கருத்து

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971-ல் பெரியார் நடத்திய பேரணி குறித்தும், அந்த பேரணியில் ராமர் படத்திற்கு ஏற்பட்ட நிலை குறித்தும் பேசினார். அவரின் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்திற்கு பதில் அளிக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி பூங்குன்றன் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

நானும் அந்த பேரணியில் பங்கேற்றேன். பெரியார் ஒரு ட்ரெக்கில் வந்து கொண்டிருந்தார். அவருக்கு கருப்பு கொடி காட்ட ஜனசங்கத்தினர் அனுமதி பெற்றிருந்தனர். கருப்பு கொடி காட்டும் போது, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் பெரியாரை நோக்கி செருப்பை வீசினார். ஆனால் பெரியாரின் வாகனம் கடந்து சென்று விட்டது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் அதே செருப்பை எடுத்து ஊர்வலத்தில் வந்த ட்ரெக்கில் இருந்த ராமர் படத்தை அடித்தனர். இது தான் நடந்தது.

பச்சை பொய்

ராமர், சீதை படங்கள் ஆடை இல்லாமல் கொண்டு வரப்பட்டதாகவும், அவற்றுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ரஜினிகாந்த் சொல்வது பச்சை பொய். ராமர் படத்துக்கு மட்டும் அல்ல, எந்த படத்துக்கும் செருப்பு மாலை போடப்பட்டிருக்கவில்லை. இந்த நிகழ்வை ஒட்டி நடந்த சம்பவங்களை தொகுத்து, தடை செய்யப்பட்ட ‘துக்ளக்’ என்ற புத்தகம் வெளியானது.

அதிலும் கூட ராமர் படம் ஆடை இல்லாமல் கொண்டு வரப்பட்டதாகவோ, செருப்பு மாலை போடப்பட்டிருந்ததாகவோ குறிப்புகள் இல்லை. ஆனால் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருந்த நிலையில் ரஜினிகாந்த் குறிப்பிட்டதை போன்று தி.மு.க.வுக்கு இந்த விவகாரம் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது.

ராமனை செருப்பால் அடித்த தி.மு.க.வுக்கு உங்கள் ஓட்டா? என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தார்கள். ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடிப்பது போலவும் அருகில் இருந்து வேடிக்கை பார்க்கும் கருணாநிதி ‘சபாஷ், சபாஷ்’ என்று கூறுவதை போன்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான போது முந்தைய தேர்தலில் 138 இடங்களையே பிடித்திருந்த தி.மு.க., அந்த தேர்தலில் 183 இடங்களை பிடித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுப.வீரபாண்டியன்

திராவிடர் விடுதலை கழக தலைவர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது:-

ரஜினி குறிப்பிடும் அந்த பேரணி 24.1.1971 அன்று சேலத்தில் நடந்தது. அங்கு நடந்த 2 நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு பேரணி அது. அந்த மாநாட்டிற்கு தடை கோரி அன்றைய ஜன சங்கம் கட்சியினர் கருப்பு கொடி காட்டினர். அந்த போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தது கருணாநிதி தான். பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவித்த கூட்டத்தினர் பெரியாரை நோக்கி செருப்பை வீசினர். அது பின்னால் வந்த வண்டியில் விழுந்தது. அந்த வண்டியில் தான் ராமர், சீதை படங்கள் இருந்தது.

தந்தை பெரியார் 12.2.1971 அன்று பொறுமையாய் இருங்கள் தோழர்களே என்று தலையங்கம் எழுதினார். அதில் ராமரை காப்பாற்றவோ, நம்மை எதிர்க்கவோ இல்லை, தேர்தலில் தி.மு.க. வந்து விடாமல் தடுக்கவே அவர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள். என்னை அடித்தாலும் கவலை கொள்ளாதீர்கள். இது நமக்கு புதிதல்ல என்று எழுதினார்.

இனமானம் காக்க, கொள்கை பரப்ப இந்த இழிவுகளையெல்லாம் தாங்கி தான் ஆக வேண்டும் என்று தன்னுடைய தொண்டர்களுக்கு பெரியார் அறிவுறுத்தினார். அந்த மாமனிதரின் உயரம் சோவுக்கும், ரஜினிக்கும் புரியவே புரியாது. விடுதலை, முரசொலி படிப்பவர்களுக்கு நாட்டின் நடப்பும், உண்மைகளும் தெரியும். துக்ளக் மட்டும் படிக்கும் அறிவாளிகளுக்கு வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின்

இதற்கிடையே, முரசொலி குறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவர்னா புரட்சித்தலைவர், தைரிய லட்சுமின்னா அம்மா என கால் நூற்றாண்டாக கால் பிடித்து காலம் கடத்தி, தலை சுத்திருச்சு என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறிவும், சுயமரியாதைக்காரனே தி.மு.க. காரன். நான் தி.மு.க.காரன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story