தி.மு.க. செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது


தி.மு.க. செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 21 Jan 2020 4:49 AM GMT (Updated: 21 Jan 2020 4:49 AM GMT)

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது.

சென்னை, 

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 38 இடங்களை கைப்பற்றியது.  எனினும், தொடர்ந்து வந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தோல்வியை தழுவியது. சமீபத்தில் 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை விட சற்று கூடுதல் இடங்களை கைப்பற்றியபோதும், மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வின் கையே ஓங்கியது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் போதிய இடங்களை ஒதுக்காததை சுட்டிக்காட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்தது. இதனால், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகி, கட்சி தலைவர்கள் தலையீட்டால் பிறகு அது சரிசெய்யப்பட்டது.

இந்த நிலையில், 27 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 9 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கும், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றியை எப்படியும் கோட்டைவிட்டு விடக்கூடாது என்பதில் தி.மு.க. தீர்க்கமாக இருக்கிறது.

எனவே, அதற்கு முன்னதாக மாவட்ட செயலாளர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் அழைத்து இதுகுறித்து ஆலோசனை நடத்த தி.மு.க. தலைமை திட்டமிட்டது. அதன் அடிப்படையில், தி.மு.க. செயற்குழு அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்களை தவிர்த்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.  கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story