தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்த உடன் விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் மு.க.ஸ்டாலின் உறுதி


தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்த உடன்   விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்   மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 26 Jan 2020 12:02 AM GMT (Updated: 2020-01-26T05:32:01+05:30)

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்த உடன் விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

மயிலாடுதுறை, 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சீர்காழி சாலை லெட்சுமிபுரத்தில் நேற்று மாலை நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முன்னோட்டம்

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற உணர்வை நமது உள்ளத்தில் தோற்றுவித்தவர் கலைஞர். அவர் காட்டிய வழியில் தான் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நாகை மாவட்டத்தில் தி.மு.க. பெற்ற மிகப்பெரிய வெற்றி, நான் எதிர்பார்க்காத வெற்றியாகும். இந்த வெற்றிக்காக பாடுபட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினருக்கும், கூட்டணியை சேர்ந்த கட்சியினருக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெறும் வெற்றிக்கு முன்னோட்டம் ஆகும்.

சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடத்த விரும்புகிறோம் என்று வெட்கப்படாமல் ஒரு அமைச்சர் சொல்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் ஒரு பற்று பணப்பற்று மட்டும் தான். காசுக்காக அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆட்சி எடப்பாடி ஆட்சி. இந்த நிலையில் தமிழக அரசு சிறப்பான ஆட்சி நடத்துகிறது என்று மத்திய அரசு விருதுகொடுக்கிறது.

ஹைட்ரோ கார்பன்

மேட்டூர் அணை சரியாக திறக்கப்படாததாலும், நீர்நிலைகள் சரியாக தூர்வாரப்படாததாலும் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற எந்த முயற்சியையும் இந்த அரசு எடுக்கவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்கள் கருத்தை கேட்க அவசியமில்லை என்றும், திட்டத்தை செயல்படுத்த சூற்றுச்சூழல் துறையில் அனுமதி பெற தேவையில்லை என்றும் மத்திய அரசு கூறுகிறது.

காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் முழுமுயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்த உடன் விவசாயத்தை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story