கோர்ட்டு வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கோர்ட்டு வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Jan 2020 9:30 PM GMT (Updated: 26 Jan 2020 8:45 PM GMT)

சேலம் கோர்ட்டு வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கோர்ட்டில் நேற்று காலை குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடி ஏற்ற ஏற்பாடுகள் நடந்தது. அப்போது கோர்ட்டு வளாகத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கேனில் பெட்ரோலுடன் வந்தார். பின்னர் அவர் திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அங்கிருந்த போலீசார் உடனடியாக ஓடி வந்து அந்த நபரிடம் இருந்த கேனை பிடுங்கினர். இதையடுத்து அவர் மீது அங்கிருந்த கோர்ட்டு ஊழியர்கள் தண்ணீரை ஊற்றினர்.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பனமரத்துப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டியை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 35) என்பதும், செவ்வாய்பேட்டையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும், திருமணம் ஆகாததும் தெரியவந்தது.

மேலும் வெங்கடாசலம் வீட்டின் அருகே வசிக்கும் விதவை ஒருவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண் தற்போது தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும், கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக வந்ததாகவும் அவர் போலீசாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து வெங்கடாசலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து வெங்கடாசலத்தை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story