மாநில செய்திகள்

குரூப்-4 முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து குவியும் புகார்கள் - நடவடிக்கை எடுக்க தேர்வர்கள் வலியுறுத்தல் + "||" + Group-4 abuse TNPSC Conducted The accumulation of complaints about exams

குரூப்-4 முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து குவியும் புகார்கள் - நடவடிக்கை எடுக்க தேர்வர்கள் வலியுறுத்தல்

குரூப்-4 முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து குவியும் புகார்கள் - நடவடிக்கை எடுக்க தேர்வர்கள் வலியுறுத்தல்
குரூப்-4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து புகார்கள் தொடருகின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 தேர்வில் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மாபெரும் மோசடிகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. கையில் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடு புகார் வெளிச்சத்துக்கு வந்த சில நாட்களிலேயே கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு போலவே, இந்த தேர்விலும் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. ஆனால் அந்த தேர்வு எழுதியவர்களில் பலர் பணிக்கு சேர்ந்து ஊதியமே பெற்றுவிட்டனர். இதனால் இந்த புகார் விஸ்வரூபம் எடுக்காமல் அப்படியே இருக்கிறது.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம், ‘குரூப்-2ஏ தொடர்பாகவும் புகார்கள் எழுந்து இருக்கின்றனவே? அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், ‘அரசுக்கு இந்த தேர்வு தொடர்பாக புகார் வரும்பட்சத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க தற்போது மேலும் ஒரு புகாரை தேர்வர்கள் சிலர் முன்வைக்கின்றனர். அதாவது, கடந்த ஆண்டு மே மாதம் 29-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தேர்வை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியும், நீலகிரி மாவட்டத்துக்கு 25-ந் தேதியும் நடத்தியது.

இந்த தேர்வு முடிவில், இனவாரியான ஒதுக்கீடு அடிப்படையில் அதிக மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் தேர்வு பட்டியலில் விடுபட்டு இருப்பதாகவும், தகுதிநிலையில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை தேர்வு செய்து பட்டியலில் இடம்பெற செய்து இருப்பதாகவும் தேர்வர்கள் பலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து கடலூரை சேர்ந்த மாதவன், கிருஷ்ணகிரியை சேர்ந்த சத்யசீலன், பழனியை சேர்ந்த சந்துரு உள்ளிட்ட சில தேர்வர்கள் கூறுகையில், ‘நாங்கள் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நல்ல மதிப்பெண் எடுத்தும் தேர்வு பட்டியலில் இடம்பெற முடியவில்லை. ஆனால், குறைந்த மதிப்பெண் எடுத்த பலர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இதை டி.என்.பி.எஸ்.சி. தெளிவுபடுத்த வேண்டும்’ என்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட தேர்வர்களில் 48 பேர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் இந்த தேர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

இதேபோன்று டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. முறைகேடு நடந்ததாக கூறும் தேர்வுகள் குறித்து டி.என்.பி.எஸ்.சி. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...