குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Jan 2020 11:00 PM GMT (Updated: 27 Jan 2020 8:53 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவின் மகன் ஏ.எம்.வி.பிரபாகரராஜாவின் திருமணம் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கதீட்ரல் ஆலயத்தில் நேற்று நடந்தது. ஆலயத்தின் அருகே வாழ்த்துரை வழங்க மணவிழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மு.க.ஸ்டாலின் மணவிழாவுக்கு தலைமை தாங்கி, மணமக்களான ஏ.எம்.வி.பிரபாகரராஜா- ஜெ.ஜி.ஹெலன் சத்யாவுக்கு மலர் மாலை மாற்ற வைத்து வாழ்த்து கூறினார்.

இந்த விழாவில், துர்கா ஸ்டாலின், தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான தயாநிதி மாறன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதவிர, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., திராவிடர் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினார்கள். விழாவுக்கு வந்திருந்தவர்களை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் வரவேற்றார்.

முன்னதாக மணவிழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தயாநிதி மாறன் இங்கு பேசும்போது, மணமகன் வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார். அவருடைய அனுபவத்தில் சொல்லியிருக்கிறார். அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பது என்னுடைய அனுபவம். அதே நேரத்தில் மணமகளையும் அமைதியாக இருக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய-மாநில அரசுகளைப் போல அமைதியாக ஜால்ரா போட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்பது தான் நம்முடைய உரிமை. ஆண்-பெண் சமம். பெரியார் சுயமரியாதை இயக்கத்தில், சீர்திருத்த மாநாட்டை நடத்தி எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்று, பெண்களுக்கான சம உரிமையை பெற்று தந்தார்.

அப்படிப்பட்ட பெரியாரை பற்றி இப்போது விமர்சனம் செய்கின்ற சூழ்நிலை உள்ளது. பெரியார் இறந்து இவ்வளவு காலம் ஆன பிறகும் அவரை பற்றி விமர்சனம் செய்கிறார்கள் என்றால் அது தான் அவரது பெருமைக்கு சான்று.

மத்திய அரசு மதம், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் கொடுமையான சட்டத்திட்டங்களை கொண்டுவரும் நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மட்டுமல்ல, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை கொண்டு வந்து நிறைவேற்றும் நிலை வந்திருக்கிறது.

அதைத் தட்டிக்கேட்கிற நம்முடைய சுயமரியாதை, உரிமை பறிக்கப்படக்கூடிய நிலை நிலவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் நிம்மதியாக நாட்டில் வாழ முடியுமா?. புதுச்சேரி மாநிலத்தில் தீர்மானம் போடப்போகிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.

கேரள மாநிலத்தில் எதிர்க்கட்சியும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தேசிய குடியுரிமை சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானமும் போடுகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள்.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்த்துக்கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதுமே எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எதிர்க்க முடியாத நிலையில் ஒரு ஆட்சி இருந்து வருகிறது.

இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று சொன்னால், தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சரவை கூடி கலந்து பேசி தீர்மானம் போடவேண்டும். நீங்கள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினால், நானே மனமுவந்து உங்களைப் பாராட்டத்தயாராக இருக்கிறேன். உங்களுக்கு நன்றி சொல்லவும் தயாராக இருக்கிறேன். அந்த தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? போடமாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான், தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து நேற்று மாலை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக் குமார், கே.பாண்டியராஜன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பெருந் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆச்சி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பத்மசிங் ஐசக், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் சண் முகப் பாண்டியன், தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் அனிதா ராதாகிருஷ்ணன், வாகை சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Next Story