சிறப்பு உயர்கல்வி நிறுவனம் அந்தஸ்து: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து ஆலோசனை


சிறப்பு உயர்கல்வி நிறுவனம் அந்தஸ்து: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 28 Jan 2020 11:00 PM GMT (Updated: 28 Jan 2020 8:04 PM GMT)

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்தும், பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை, 

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்தும், பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து துணைக்குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்கிறது.

மத்திய அரசு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு உயர்கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை வழங்கியது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் ஒப்புதல் வழங்குவதில் தமிழக அரசு தாமதம் காட்டியது.

அதற்கு முக்கிய காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்துவிட்டால், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீடு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதியது.

இடஒதுக்கீட்டில் தெளிவான கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதங்களையும் எழுதியது. அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, இடஒதுக்கீட்டில் எந்த பிரச்சினையும் இருக்காது என தெரிவித்தது.

இதுதவிர சிறப்பு அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டால், அதன் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளை கண்காணிக்க முடியாது. ஆகவே பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவும் எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான ஒப்புதல் கொடுப்பது, பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது ஆகியவை குறித்து தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்க அரசு தரப்பில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், பி.தங்கமணி மற்றும் நிதி(செலவினம்), சட்டம், உயர்க்கல்வித்துறை செயலாளர்களும் இடம்பெற்று இருந்தனர்.

இந்த குழு தன்னுடைய முதல் ஆலோசனை கூட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 6-ந்தேதி நடத்தியது. இந்த நிலையில் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்தில் குழுவில் உள்ள 5 அமைச்சர்களுடன் தலைமை செயலாளர் கே.சண்முகம், நிதித்துறை(செலவினம்) செயலாளர் கிருஷ்ணன், சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார், உயர்கல்வி துறை செயலாளர் அபூர்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இடஒதுக்கீட்டில் எந்த வகையிலும் பிரச்சினை வராத வகையில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு ஒப்புதல் குறித்தும், பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது எப்படி? அப்படி பிரித்தால் என்னென்ன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் உலகளவில் பாரட்டப்படும் நிலையில் சிறப்பு அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகமாக மாறும்போது, அங்கு கல்விச்சூழல் இன்னும் அதிகரிக்கும். சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்போது இடஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்தோம்.

இதுதொடர்பாக விரிவாக கலந்து ஆலோசித்து தற்போதைய உயர்மட்டக்குழு தனியாக துணைக்குழுவை அமைத்து இருக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழு நிதியை பெறுவது குறித்தும், இதர பிரச்சினைகள் குறித்தும் இந்த துணைக்குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும். எந்த காலத்திலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படாது. அது எப்போதும்போல அண்ணா பெயரிலேயே இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story