குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்தது அம்பலம் காரைக்குடி சார்-பதிவாளர் சிக்கினார்


குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்தது அம்பலம் காரைக்குடி சார்-பதிவாளர் சிக்கினார்
x
தினத்தந்தி 30 Jan 2020 12:15 AM GMT (Updated: 2020-01-30T00:29:48+05:30)

குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பதும், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டதும் அம்பலமாகி இருக்கிறது.

சிவகங்கை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வெளியூர்களில் இருந்து வந்து ராமேசுவரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு எழுதியவர்கள்தான் இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் என தெரியவந்திருப்பதால், அவர்களுக்கு உதவியவர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம் காந்தன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த விக்கி (வயது 25), கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தனலட்சுமி நகரை சேர்ந்த சிவராஜ் (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்களுடன் சேர்த்து இந்த வழக்கில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று அதிரடி திருப்பமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணியில் இருந்த சார்-பதிவாளர் வேல்முருகன் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரை விசாரணைக்காக போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இதன் மூலம் இந்த விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பமும் ஏற்பட்டது.

அதாவது, தேர்வு எழுதியவர்கள், இடைத்தரகர்கள் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு வந்த நிலையில், அதிகாரி அந்தஸ்தில் உள்ள சார்-பதிவாளர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த சார்-பதிவாளரும், அவருடைய குடும்பத்தினரும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் முறைகேடு செய்து, தரவரிசையில் முன்னணி இடங்களை பிடித்து அடுத்தடுத்து அரசு பணிகளில் சேர்ந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

இதன் மூலம் குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பது அம்பலம் ஆனது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் குரூப்-4 தேர்வில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரிய கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த திருவராஜ் என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளிதான் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்தவர். ஆனால், அவர் உண்மையிலேயே அதிக மதிப்பெண் பெற்றாரா? அல்லது அதில் மோசடி அரங்கேறி உள்ளதா? என்பதை அறிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருவராஜை பிடித்து சென்னை அழைத்து வந்து கடந்த 10 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே பெரிய கண்ணனூர் கிராமத்தை சேர்ந்தவர்தான் சித்தாண்டி (46). இவர் கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்பத்தில் பணியாற்றிய அவர், 2015-ம் ஆண்டு முதல் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னையில் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த அதிகாரி ஓய்வு பெற்று விட்டாராம். பின்னர் சித்தாண்டி சப்-இன்ஸ்பெக்டர் ஆனார்.

ஆனால் ஏற்கனவே, தான் பணியாற்றிய அதிகாரியுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக இடைத்தரகர்களுடன் சேர்ந்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் சித்தாண்டி முறைகேட்டில் ஈடுபட்டு தன்னுடைய குடும்பத்தினரையும், வேண்டியவர்களையும் அரசுப் பணியில் சேர்த்து வந்ததாக புகார் எழுந்திருக்கிறது. மேலும் தற்போது நடந்த குரூப்-4 தேர்வு தரவரிசையில் முதல் இடம் பிடித்த திருவராஜூம் சொந்த ஊர்க்காரர் என்ற அடிப்படையில் சித்தாண்டியிடம் பணம் கொடுத்து, அதன் மூலமாக வெற்றி பெற்று இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எனவே சி.பி.சி.ஐ.டி போலீசார் சித்தாண்டியை விசாரணைக்காக அழைத்தனர். ஆனால், அவர் தலை மறைவாகிவிட்டார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சேகர் (மதுரை), சரவணன் (ராமநாதபுரம்) ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று பெரிய கண்ணனூரில் உள்ள சித்தாண்டியின் வீட்டுக்கு திடீரென சென்றனர். அங்கு வீடு பூட்டிக் கிடந்தது. அதன் பின்னர் சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள அவரது உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்றனர். அந்த வீடும் பூட்டி இருந்தது.

சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் சித்தாண்டியின் மனைவி பிரியா, சித்தாண்டியின் தம்பிகள் வேல்முருகன், கார்த்தி ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெற்றி பெற்று தற்போது அரசு பணிகளில் இருப்பது தெரியவந்தது.

இதில் வேல்முருகன், காரைக்குடி முத்துப்பட்டிணத்தில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் சார்-பதிவாளராக பணியாற்றி வருவது தெரியவந்ததால் போலீசார் அங்கு அதிரடியாக சென்றனர். பணியில் இருந்த அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் பத்திரபதிவு அலுவலகம் பரபரப்பானது.

இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

சப்-இன்ஸ்பெக்டர் சித்தாண்டி, சென்னையில் மனைவி பிரியா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

சித்தாண்டியின் தம்பிகளான வேல்முருகன், கார்த்தி மற்றும் சித்தாண்டியின் மனைவி பிரியா ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பணியில் சேர்ந்து உள்ளனர். அதிலும் அதிக மார்க் எடுத்து தரவரிசையில் முன்னணி இடங்களை பிடித்தனர்.

இதுதொடர்பாக வெளியான முறைகேடு புகார் குறித்து போலீசாரின் விசாரணை தொடங்கியதும் சித்தாண்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மருத்துவ விடுப்பில் சென்று உள்ளார். இதையடுத்து அவரது சொந்த கிராமமான பெரிய கண்ணனூரில் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்று கருதி அங்கு சென்று சோதனை செய்ய முயன்றோம். ஆனால் அவரது வீடு பூட்டி இருந்தது. அந்த வீட்டில் இருந்த அவருடைய பெற்றோர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு எங்கேயோ தலைமறைவாகிவிட்டனர்.

சித்தாண்டியின் மனைவி பிரியா சென்னையில் அதிகாரியாக பணியாற்றி வருவது தெரியவருகிறது. தற்போது சார்-பதிவாளர் வேல்முருகனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சித்தாண்டியின் மற்றொரு தம்பி கார்த்தி எங்கு அரசு பணியில் உள்ளார்? என்பதையும் விசாரித்து வருகிறோம். சித்தாண்டி, கார்த்தி உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story