ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு: சி.பி.ஐ. எதிர்மனுதாரராக சேர்ப்பு தி.மு.க. கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு உத்தரவு


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு: சி.பி.ஐ. எதிர்மனுதாரராக சேர்ப்பு தி.மு.க. கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Jan 2020 10:00 PM GMT (Updated: 29 Jan 2020 7:25 PM GMT)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கில் சி.பி.ஐ.யை எதிர்மனுதாரராக சேர்க்க தி.மு.க.வுக்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது அ.தி.மு.க. சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று இரண்டாக பிரிந்துக் கிடந்தது. இதில் சசிகலா அணியின் சார்பில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக ஆளுங்கட்சி அமைச்சர்கள் களம் இறங்கி, வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப்பொருட்களை சரளமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் பெயரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின.

இதுகுறித்து வருமான வரித்துறை, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது. இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக அத்தொகுதி தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

அதேநேரம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வைரக் கண்ணன் என்பவரும், தேர்தல் நேரங்களில் பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மருதுகணேசும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக அபிராமபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி திருத்தணி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நரசிம்மன் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், மருதுகணேஷ் ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கில், திருத்தம் செய்ய அனுமதி கேட்டு ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘பணப்பட்டுவாடா வழக்கை தனி நீதிபதி ரத்து செய்ததில் போலீஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கூட்டுச்சதி செய்துள்ளனர்.

எதிர்தரப்புக்கு நோட்டீஸ் கூட அனுப்பாமல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ.யை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதி வேண்டும். பணப்பட்டுவாடா குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். இடைத்தேர்தலில் நான் செய்த செலவுத்தொகையை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் நேற்று உத்தரவு பிறப்பித்தனர். அதில், ‘இந்த வழக்கில் சி.பி.ஐ.யை எதிர்மனுதாரராக சேர்த்து சி.பி.ஐ. விசாரணை கோருவதற்கு, மனுவில் திருத்தம் செய்வது தொடர்பான மனுதாரர் மருதுகணேசின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.

அதேநேரம், தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் செலவழித்த தொகையை திருப்பி கேட்கும் கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று உத்தரவிட்டனர். ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான பிரதான வழக்கு வருகிற பிப்ரவரி 11-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Next Story