சீனாவில் இருந்து வந்த மருத்துவ கழிவு கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வரவில்லை செயலாளர் விளக்கம்


சீனாவில் இருந்து வந்த மருத்துவ கழிவு கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வரவில்லை செயலாளர் விளக்கம்
x
தினத்தந்தி 30 Jan 2020 6:45 PM GMT (Updated: 2020-01-30T23:50:08+05:30)

சீனாவில் இருந்து வந்த மருத்துவ கழிவு கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வரவில்லை என சென்னை துறைமுக பொறுப்பு கழக செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

சீனா நாட்டில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அண்டை நாடுகள் அனைத்தும் அந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று சென்னை வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. மருத்துவ கழிவுகளை அனுமதிக்க கூடாது என அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பு குரல் எழுந்தன. இந்த நிலையில் இதுகுறித்து சென்னை துறைமுக பொறுப்பு கழக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–

சென்னை துறைமுகத்துக்குள் கொண்டு வரப்படும் சரக்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து தான் அனுமதிப்பார்கள். அதுபோல இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு போன்றவை தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ளும். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் சென்னை துறைமுகத்துக்கு வந்து சீனா கப்பல் குறித்த தகவல் தொடர்பாக ஆய்வு நடத்தியது. ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என்று தெரிவித்தது.

சென்னை துறைமுகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் உள்ள பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் என்னென்ன சிகிச்சை வழிமுறைகள் செய்யப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கப்பலை மேலும் நீண்ட தூரத்தில் நிறுத்துவதற்காக உத்தரவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

Next Story