‘அரசியல் பற்றி கேள்வி கேட்காதீர்கள்’ - நிருபர்களிடம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கெஞ்சல்


‘அரசியல் பற்றி கேள்வி கேட்காதீர்கள்’ - நிருபர்களிடம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கெஞ்சல்
x
தினத்தந்தி 4 Feb 2020 10:15 PM GMT (Updated: 4 Feb 2020 9:24 PM GMT)

‘அரசியல் பற்றி கேள்வி கேட்காதீர்கள், துறை ரீதியாக வேண்டுமானால் கேள்வி கேளுங்கள்’ என்று கெஞ்சாத குறையாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை,

பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சமீபகாலமாக பல்வேறு பிரச்சினைகளில் அதிரடியாக கருத்துகளை கூறி வருகிறார். ஆனால் அவை அவர் சார்ந்த அ.தி.மு.க. கட்சிக்கான கருத்தாக இருக்கவில்லை. சமீபத்தில் அவர் கூறி இருந்த மதம் சார்ந்த கருத்துகள் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு ஆளானது. அவர் மீது கவர்னரிடம் தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க. கட்சி மற்றும் அரசுக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துகளை கூறிவருவதாக அந்தக்கட்சியிலும், மற்ற அமைச்சர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராஜேந்திர பாலாஜி தலைமை செயலகத்துக்கு வந்திருந்தார். பின்னர் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பால்வளத்துறைக்கான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

அந்த கூட்டம் முடிந்த பின்பு நிருபர்கள் அவரை சுற்றி நின்று கேள்விகள் கேட்கத் தொடங்கினர். அதற்கு ராஜேந்திர பாலாஜி “என்னிடம் அரசியல் பற்றி கேட்காதீர்கள். அரசியல் கருத்துகளை கூறவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எனவே என்னை விட்டுவிடுங்கள். துறை ரீதியாக வேண்டுமானால் கேள்வி கேளுங்கள்” என்று கெஞ்சாத குறையாக கூறியுள்ளார். பின்னர் துறை ரீதியான கேள்விகளுக்கு மட்டும் அவர் பதில் அளித்தார்.

இதேபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றனர். அதற்கு அவர், “ராஜேந்திர பாலாஜியிடம் போய் கேளுங்கள். அவர் பால் போல் பொங்குவார்” என நகைச்சுவையுடன் பதில் அளித்தார்.

Next Story