அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்ட எல்.ஐ.சி. ஊழியர்கள் முடிவு - ஊழியர் சங்க நிர்வாகி பேட்டி


அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்ட எல்.ஐ.சி. ஊழியர்கள் முடிவு - ஊழியர் சங்க நிர்வாகி பேட்டி
x
தினத்தந்தி 4 Feb 2020 11:30 PM GMT (Updated: 2020-02-05T04:47:09+05:30)

எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அடுத்தக்கட்டமாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டப்போவதாக ஊழியர் சங்க நிர்வாகி தெரிவித்தார்.

சென்னை, 

எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீட்டுக் கழகம்) நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வண்ணம் எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று முன்தினம் மதியம் உணவு இடைவேளையின் போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி. அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ஒரு மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி, நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று ஒரு மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகம் முன்பு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயராமன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கண்டித்து, அனைத்து தரப்பு ஊழியர்களும், வளர்ச்சி அதிகாரிகளும், முகவர்களும் இணைந்து ஒரு மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த வேலைநிறுத்தம் முழு வெற்றிகரமான வேலை நிறுத்தமாக அமைந்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மிகவும் தவறானது. எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். ஆண்டுதோறும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் சுமார் 3.50 லட்சம் கோடி ரூபாயை வழங்கி வருகிறது.

எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்றால் மத்திய அரசுக்கு தேவையான நிதியை இந்த நிறுவனத்தால் வழங்க முடியாது. இது நாட்டின் ஏழை, எளிய மக்களை மிகவும் கடுமையாக பாதிப்பதோடு இந்த நிறுவனத்தை நம்பி பாலிசி எடுத்துள்ள பாலிசிதாரர்களையும் பாதிக்கும்.

அடுத்த கட்டமாக மக்களை சந்திப்பது, அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது இப்படி பல திசைகளில் எங்கள் பிரசாரத்தை நடத்தி மக்கள் கருத்தை திரட்டி அரசின் முடிவை நாங்கள் தோற்கடிப்போம். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் ஒன்று கூடி முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story