குற்றவாளி யார் என்று தெரிந்தால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவிக்கலாம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


குற்றவாளி யார் என்று தெரிந்தால்   சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவிக்கலாம்  அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 8 Feb 2020 10:15 PM GMT (Updated: 8 Feb 2020 10:04 PM GMT)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரத்தில் குற்றவாளி யார் என்று தெரிந்தால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் கழகத்தின் பேரவை கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள ஷெனாய் நகரில் நேற்று நடந்தது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பொறியாளர் நல நிதி திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இதேபோல மீன்வளம், பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் புதிய மின்னக கட்டிடத்தின் மாதிரி வடிவத்தினை திறந்துவைத்தார்.

வெளிப்படையான நடவடிக்கை

இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மின்வெட்டு இல்லாத ஒரு மாநிலமாக நம் தமிழகம் உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) முறைகேட்டில் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசு மீது குறை கூறுவதற்கு எதுவும் இல்லை என்பதால், தவறான தகவல்களை கூறி மக்களை திசை திருப்புவதற்காகவும், அரசு மீது வேண்டும் என்றே உள்நோக்கம் கற்பிக்கவேண்டும் என்பதற்காகவும் காழ்ப்புணர்ச்சியோடு பொத்தாம் பொதுவாக உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

வழக்கு தொடருவேன்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூங்கி எழுந்து மீண்டும் தூங்கும் வரை பதவி விலகவேண்டும், பதவியை ராஜினாமா செய்யவேண்டும், தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்ற வார்த்தையை மட்டுமே பேசி வருகிறார். சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இன்று (நேற்று) காலை கூட ‘குரூப்-2ஏ’வில் முறைகேடு செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிப்படையாக தான் விசாரணை மற்றும் கைது எல்லாம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேட்டில் யார் அந்த உயர் அதிகாரிகள்? மு.க.ஸ்டாலின் அதை சொல்லட்டும். அதற்கு அவருக்கு திரானி இல்லை. குற்றவாளிகள் யார்? என்றும், தவறு செய்த உயர் அதிகாரி யார்? என்றும் தெரிந்தால் தாராளமாக மு.க.ஸ்டாலின் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறினால் அவர் மீது வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story