குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து -மு.க.ஸ்டாலின் தகவல்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து   -மு.க.ஸ்டாலின் தகவல்
x
தினத்தந்தி 8 Feb 2020 11:30 PM GMT (Updated: 8 Feb 2020 11:26 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. நடத்திய கையெழுத்து இயக்கத்தில் இதுவரை கையெழுத்திட்டவரின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டிவிட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவள்ளூர்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளது. இந்தநிலையில், நேற்று திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நாட்டில் இருக்கும் அனைவரும் சமம் என்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சமமாக யாரும் வாழக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்.

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கிறது. நம்முடைய நாட்டைப் பற்றி இன்னொரு நாடு விமர்சிக்கக்கூடிய கேவலமான நிலைக்கு, இந்த நாடு போய்க் கொண்டிருக்கிறது. அதனால்தான் நீதிகேட்டு ஒரு நெடும் பயணத்தை நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். பல போராட்டங்களை வியூகம் அமைத்து நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம், கண்டனக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து பல தீர்மானங்களை இயற்றிக் கொண்டிருக்கிறோம்.

2 கோடி பேர் கையெழுத்து

ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறவேண்டும் என்று முடிவு செய்து இந்த பணியைத் தொடங்கினோம். நேற்றைய கணக்கின்படி கையெழுத்து 2 கோடியைத் தாண்டிவிட்டது. மக்கள் உண்மைகளை புரிந்துகொண்டு இந்த கொடுமைகளை தெரிந்துகொண்டு அவர்களாகவே முன்வந்து கையெழுத்துகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கையெழுத்து இயக்கத்தைக் கூட கேலி, கிண்டல் செய்து இதை தடை செய்ய வேண்டும் எனச் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கையெழுத்து இயக்கம் என்பது ஜனநாயக நடைமுறைகளில் ஒன்றுதான் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிறைவு நாள் நிகழ்ச்சி

இதேபோல், சென்னை ஓட்டேரி, பவானி எல்லை அம்மன் கோவில் பகுதியில் கையெழுத்து இயக்க நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தனிமனித ராப் பாடல் மூலமாக பிரசாரம் செய்து வரும் இளைஞர் அறிவு மற்றும் கானா பாடல்களில் புகழ்பெற்ற பாலா ஆகியோர் பாடல்களுடன் துவங்கியது. அதன்பின்னர், திரு.வி.க.நகர் பகுதியில் மு.க.ஸ்டாலின் மக்களைச் சந்தித்து கையெழுத்து பெற்றார்.

இதில், எம்.பி.க்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., ப.தாயகம் கவி எம்.எல்.ஏ., கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story