தமிழகத்தில் தொடர் போராட்டம் எதிரொலி: சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை, போலீசார் தீவிர கண்காணிப்பு


தமிழகத்தில் தொடர் போராட்டம் எதிரொலி: சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை, போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2020 10:15 PM GMT (Updated: 16 Feb 2020 10:06 PM GMT)

தமிழகத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புபவர்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந்தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒருவர் உயிர் இழந்ததாக வதந்தி பரவியது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், முஸ்லிம்கள் வண்ணாரப்பேட்டையில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினர். மேலும், வதந்திகள் பரவி சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிடக்கூடாது என்பதில் போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்டவைகளை தமிழக சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சென்னையில் மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசாரும் கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளனர்.

போராட்டம் நடைபெறும் இடங்கள், போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறியவும், கண்காணிக்கவும், அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் உளவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தேவையற்ற வதந்திகளை பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதியும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரோந்து போலீசாரும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story