குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது - சபாநாயகர் அறிவிப்பு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது - சபாநாயகர் அறிவிப்பு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 18 Feb 2020 12:00 AM GMT (Updated: 17 Feb 2020 11:25 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சபாநாயகர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பில் ஈடுபட்டன.

சென்னை, 

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:-குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். வண்ணாரப்பேட்டையில் போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது. பெண்கள் அமைதியாக போராடினார்கள். ஆனால் அவர்கள் மீது திடீரென்று யார் தாக்குதல் நடத்தியது?. தாக்குதல் நடத்த தூண்டி விட்டவர்கள் யார்?.

சம்பவம் நடந்த உடனே முதல்-அமைச்சரோ அல்லது அமைச்சர்களோ அங்கு சென்று பேசியிருந்தால் பிரச்சினை பெரிதாகாமல் தடுத்து இருக்கலாம். அதை செய்யாதது ஏன்?. இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்த கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்க வேண்டும்.

இதேபோல் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆகியோர் பேசினர்.

சபாநாயகர்:-கடந்த கூட்டத்திலேயே நான் இதற்கு பதில் அளித்து விட்டேன். ஒரு முறை விவாதிக்கப்பட்டு விட்டதால் மீண்டும் அதை விவாதிக்க முடியாது. வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக நீங்கள் பேசினால், அனுமதி அளிக்கப்படும். 

இந்த நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் அவை விதியை குறிப்பிட்டு சில வார்த்தைகள் பேசினார்.

சபாநாயகர்:-ஆஸ்டின், நான் விதிகளின் படி தான் அவையை நடத்துகிறேன். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஒரு நோட்டீசை கொடுத்தீர்கள். அதனை நான் ஏற்க மறுத்து ஜனவரி 10-ந் தேதி கடிதம் அனுப்பி இருக்கிறேன்.

இந்த நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் ஆகியோர் எழுந்து குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதமே நடைபெறாத நிலையில், அதில் எப்படி முடிவு எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் உறுப்பினர் தமிமுன் அன்சாரியை (மனிதநேய ஜனநாயக கட்சி) பேச சபாநாயகர் அழைத்தார். இந்த நேரத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து, விவாதம் நடத்தாமல் முடிவு எடுப்பது சரியா?. இது தொடர்பாக 173 பிரிவு உ சட்ட விதியை தவறாக சொல்லுகிறீர்கள்.

சபாநாயகர்:-நான் நீங்கள் கொடுத்த பொருள் மீது ஆய்வு செய்து, கடிதம் கொடுத்து விட்டேன். இதற்கு மேல் இதனை விவாதிக்க முடியாது.

இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக பதில் அளித்து பேசினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசிய பிறகு, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார்.

மு.க.ஸ்டாலின்:-முதல்-அமைச்சர் பதில் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இதேபோல், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி வெளிநடப்பில் ஈடுபட்டது.

சட்டசபைக்கு வெளியே நிருபர் களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த முறையே நாங்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தோம். சட்டசபையிலும் வலியுறுத்தினோம். அப்போது அவர், தன்னுடைய ஆய்வில் இருப்பதாக தெரிவித்தார். இந்த முறை, போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிற சூழ்நிலையில் சபாநாயகரிடம் மீண்டும் வலியுறுத்தினோம். இதுவரை ஆய்வில் இருப்பதாக சொன்னவர், இன்றைக்கு அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக சொன்னார். இதனால் எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வெளிநடப்பு செய்து இருக்கிறோம்.

போலீசார் மீது தாக்குதல் நடத்த தூண்டி விடப்பட்டதாக ஆளுங்கட்சி திட்டமிட்டு பிரசாரம் செய்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது கூட கோர்ட்டில் வழக்கு இருந்தது. அதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவில்லையா?. விவாதித்தோம், தீர்மானம் நிறைவேற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story