ஒ.பன்னீர் செல்வம் எப்போது மாடு பிடித்தார்?- பேரவையில் சிரிப்பலையை உண்டாக்கிய துரைமுருகன்


ஒ.பன்னீர் செல்வம் எப்போது மாடு பிடித்தார்?- பேரவையில் சிரிப்பலையை உண்டாக்கிய துரைமுருகன்
x
தினத்தந்தி 18 Feb 2020 7:21 AM GMT (Updated: 18 Feb 2020 7:21 AM GMT)

ஓபிஎஸை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள். அவர் எப்போது மாடு பிடித்தார் என சட்டப்பேரவையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியது சிரிப்பலையை உண்டாக்கியது.

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் இன்று  பட்ஜெட் குறித்து 2 ஆம்  நாள் விவாதம் நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பேசும் போது  துணை முதல்-அமைச்சர்  ஒ.பன்னீர்செல்வத்தை  ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், அவர் என்ன மாடுபிடி வீரரா?. இதற்கு முன் காளைகளை அடக்கி இருக்கிறாரா ? ஓபிஎஸ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடு பிடித்தால் நாங்கள் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நேரில் வந்து பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறோம் என துரைமுருகன் பேசினார். அவரது பேச்சு  பேரவையில் சிரிப்பலை உண்டாக்கியது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக சிறப்பு அனுமதியை பெற்று தந்ததால் ஓ.பி.எஸ்.சை அன்போடு ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாக விளக்கம் தந்தார். மேலும், அடுத்தாண்டு  துரைமுருகன் புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்க வந்தால் அதற்கான ஏற்பாட்டை செய்து தருகிறேன் எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் 4-ந்தேதி   சட்டப்பேரவையில் பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 

என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம் .ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என்னவாகும்.  காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என  நகைச்சுவையாக கூறி இருந்தார்.

Next Story