தேமுதிகவிற்கு எம்பி சீட் முதலமைச்சர் தருவார் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


தேமுதிகவிற்கு எம்பி சீட் முதலமைச்சர் தருவார் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 26 Feb 2020 9:04 AM GMT (Updated: 26 Feb 2020 9:24 AM GMT)

முதல்-அமைச்சர் கூட்டணி தர்மத்துடன் தேமுதிகவிற்கு எம்பி சீட் தருவார் என்று நம்புகிறோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய நாடாளுமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அடுக்காக செயல்படுகிறது. மக்களவையின் 545 உறுப்பினர்களில் 543 பேர் பொதுத்தேர்தல் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் எம்.எல்.ஏ.க் களால் தேர்ந்து எடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

தற்போது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் இருந்து 18 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா (பா.ஜனதாவில் இணைந்துள்ளார்), தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதியுடன் முடிவடைகிறது.

காலியாகும் இந்த பதவிகளில் புதிய உறுப்பினர்களை ஏப்ரல் மாதமே நியமித்தாக வேண்டும். இதனை முன்னிட்டு, 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை இந்திய தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 6 முதல் 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்கான தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக, திமுக தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது.  இதனால் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கான எம்.பி. பதவியைப் பெற முயல்கின்றன. அதிமுக கூட்டணியில் கடந்தமுறை பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி. பதவி அளிக்கப்பட்டது. திமுகவில் வைகோவுக்கு அளிக்கப்பட்டது.  அதிமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு எம்.பி. பதவி அளிக்கப்படுவதாக பேசி முடிவானதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில்  சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றி தான் எல்லோரும் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதன் பிரதிபலிப்பு டெல்லியில் எதிரொலித்து 19 உயிர்களை இழந்துள்ளோம். நாம் சிஏஏ என்பது பற்றி குழப்பமான நிலையில் உள்ளோம். சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன. மதத்தைச் சொல்லி, இனத்தைத் தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் பாதுகாப்பு மிக முக்கியம். அதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ளவேண்டும். அதே நேரத்தில் இங்கு வாழும் இஸ்லாமிய மக்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக களத்தில் தேமுதிக அதனை எதிர்க்கும்.

தேமுதிக கூட்டணி தர்மத்தை எப்போதும் கடைப்பிடிக்கின்ற கட்சி. முதல்-அமைச்சரும் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பார் என எதிர்பார்க்கிறோம். அதன் அடிப்படையில் மாநிலங்களவை எம்.பி. பதவியை தேமுதிகவுக்குத் தருவார் என எதிர்பார்க்கிறோம்.  கூட்டணி முடிவானபோதே, மாநிலங்களவை எம்.பி குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி தருவது குறித்து தலைமைக் கழகம் தான் முடிவு செய்யும் என முதல்-அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.பி பதவியை கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் முடிவெடிப்பது அதிமுக தலைமை கழகம் தான் என முதல்-அமைச்சர்  விளக்கம் அளித்துள்ளார்.

Next Story