இந்து மக்கள் கட்சி தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய நித்யானந்தா மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


இந்து மக்கள் கட்சி தலைவர் தொடர்ந்த   அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய நித்யானந்தா மனு தள்ளுபடி   ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Feb 2020 9:15 PM GMT (Updated: 29 Feb 2020 8:08 PM GMT)

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய நித்யானந்தா மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத். இவரை பற்றி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நித்யானந்தா சில அவதூறு கருத்துகளை தெரிவித்தார். இதையடுத்து நித்யானந்தா மீது கோவை 1-வது குற்றவியல் கோர்ட்டில் அர்ஜூன் சம்பத் அவதூறு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார். அதில், ‘கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்த பேட்டிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் என் மீது அவதூறு வழக்கை அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்துள்ளார்.

எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இந்த அவதூறு வழக்கிற்காக கோவை கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து எனக்கு விலக்கு அளிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

நீதிபதி கிண்டல்.....

இந்த வழக்கை 2014-ம் ஆண்டு விசாரித்த ஐகோர்ட்டு, நித்யானந்தா விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜராகி வந்த வக்கீல் பாலா டெய்சி, தன்னுடைய வக்காலத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறினார். மற்றொரு வக்கீல் நித்யானந்தா சார்பில் ஆஜராக உள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து நீதிபதி, ‘நித்யானந்தா ‘கைலாஷ்’ என்று தனி நாட்டை உருவாக்கி விட்டதாகவும், அவர் அங்கு குடியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. அவரை நீதிமன்றமும் தேடி வருகிறது. ஒரு நாட்டின் அதிபரை எப்படி தொடர்பு கொள்வீர்கள்?’ என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை தள்ளி வைத்தார்.

தள்ளுபடி

இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story