குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோட்டையை முற்றுகையிட முயற்சி; சாலை மறியல் செய்த 200 பேர் கைது


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோட்டையை முற்றுகையிட முயற்சி; சாலை மறியல் செய்த 200 பேர் கைது
x
தினத்தந்தி 9 March 2020 11:30 PM GMT (Updated: 9 March 2020 11:18 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கோட்டையை முற்றுகையிட முயன்றனர். அப்போது தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்தும், இதனை அமல்படுத்தமாட்டோம் என்று சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சென்னை கோட்டையை (சட்டமன்றம்) முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சவுந்தரராஜன், மாவட்ட செயலாளர்கள் பாக்கியம், சுந்தர்ராஜன், செல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி அருகில் இருந்து கோட்டையை முற்றுகையிட புறப்பட்டனர். ஆனால் போலீசார் அவர்களை தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடுப்புவேலியை தாண்டி போராட்டக்காரர்கள் கோட்டையை நோக்கி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை கயிறு கட்டி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாரிமுனை அருகே கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் முதல்-அமைச்சர் இதனை அமல்படுத்தமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றாமல் இருக்கிறார். கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடத்தமாட்டோம் என்றும், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். இனியும் தாமதித்தால் தமிழகம் போர்க்களமாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story