பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி, மக்கள் மீது சுமையை ஏற்றுவதா? - கே.எஸ்.அழகிரி கண்டனம்


பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி, மக்கள் மீது சுமையை ஏற்றுவதா? - கே.எஸ்.அழகிரி கண்டனம்
x
தினத்தந்தி 15 March 2020 7:48 AM GMT (Updated: 15 March 2020 7:48 AM GMT)

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி, மக்கள் மீது சுமையை ஏற்றுவதா என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலன் மக்களுக்கு சென்றடைகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய பா.ஜ.க. அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2-ல் இருந்து ரூ.8 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2-ல் இருந்து ரூ.4 ஆகவும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதைத்தவிர, சாலை வரியும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.22.98 ஆகவும், டீசலுக்கு ரூ.18.83 ஆகவும் கடுமையாக உயர்ந்து இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை 9 முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் கிடைத்து இருக்கும் பலன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல், கடுமையான நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க கலால் வரியை மத்திய பா.ஜ.க. அரசு விதித்து இருக்கிறது. இதன் மூலம் மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றி, துன்பத்திற்கு ஆளாக்கி இருக்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story