தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - சட்டசபையில் மசோதா தாக்கல்


தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - சட்டசபையில் மசோதா தாக்கல்
x
தினத்தந்தி 17 March 2020 12:00 AM GMT (Updated: 16 March 2020 11:39 PM GMT)

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் வகையிலான சட்டமசோதாவை நேற்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

சென்னை, 

தமிழக அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் 2010-ம் ஆண்டு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த சட்டத்தின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது, பட்டப்படிப்பு தகுதிக் கான அரசுப்பணிக்கு, பட்டப்படிப்புடன் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு தகுதிக்கான அரசு பணிக்கு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பை தமிழ்வழி கல்வி மூலம் பயின்று இருக்க வேண்டும்.

அதேபோன்று 10-ம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றிருக்க வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியிடங்களுக்கு தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு இதுவரை 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இருந்த சட்டத்தில், இட ஒதுக்கீடு பெற 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழ் வழியில் படிக்க அவசியம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இந்த இடஒதுக்கீடு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இனி தமிழ்வழியில் கல்வி பயின்றால் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும்.

2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவும் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின்படி, தேர்ச்சிக்கான மதிப்பெண் 35-லிருந்து 45 ஆக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story