தியாகராயநகரில் கடைகள் அடைப்பு: எங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதா? - வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக கடைக்காரர்கள் புலம்பல்


தியாகராயநகரில் கடைகள் அடைப்பு: எங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதா? - வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக கடைக்காரர்கள் புலம்பல்
x
தினத்தந்தி 19 March 2020 9:30 PM GMT (Updated: 19 March 2020 5:30 PM GMT)

சென்னை தியாகராயநகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடைக்காரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பெருநகர சென்னை மாநகராட்சி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான தியாகராயநகர் ரெங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் உள்ள கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதன்படி, நேற்றுமுன்தினம் முதல் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் சிறிய கடைகளும் அடங்கும். இந்தநிலையில் தியாகராயநகர் பகுதியை மட்டும் குறிப்பிடுவது ஏன்? என்றும், சிறிய கடைகளை திறக்க மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் ரெங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரெங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சர்புதீன் கூறுகையில், ‘தியாகராயநகர் ரெங்கநாதன் தெருவில், மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கி வேறு பகுதிகளுக்கு கடந்து செல்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். பொருட்கள் வாங்க வருபவர்கள் வெறும் 30 சதவீதம் பேர் தான். அதனை கருத்தில் கொண்டும், கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதை கருதியும் சிறுகடைகளை மட்டுமாவது திறக்க அனுமதிக்க வேண்டும். ஏதோ தியாகராயநகரில் மட்டும்தான் கூட்டம் இருப்பதாக நினைக்கக்கூடாது. பாரிமுனை உள்பட பல இடங்களில் கடைகள் அதிகம் இருக்கின்றன. அங்கும் இதே நிலை தான். எங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்?’ என்றார்.

Next Story