கொரோனா வைரஸ் எதிரொலி; சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை வரும் 31ந்தேதி வரை நிறுத்தம்


கொரோனா வைரஸ் எதிரொலி; சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை வரும் 31ந்தேதி வரை நிறுத்தம்
x
தினத்தந்தி 22 March 2020 3:36 PM GMT (Updated: 22 March 2020 3:36 PM GMT)

கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னையில் வருகிற 31ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை முழுவதும் நிறுத்தப்படுகிறது.

சென்னை,

சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.  தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து பாதிப்பினை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.  இதன்படி, தமிழகத்தில் இருந்து ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை வருகிற 31ந்தேதி வரை நிறுத்தப்படுகிறது.

இதேபோன்று சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை வருகிற 31ந்தேதி வரை முழுவதும் நிறுத்தப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story