167 ஆண்டுகால வரலாற்றில் நாடு முழுவதும் 3-வது முறையாக ரெயில் சேவை நிறுத்தம்


167 ஆண்டுகால வரலாற்றில் நாடு முழுவதும் 3-வது முறையாக ரெயில் சேவை நிறுத்தம்
x
தினத்தந்தி 25 March 2020 8:21 PM GMT (Updated: 25 March 2020 8:21 PM GMT)

கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இது 167 ஆண்டுகால வரலாற்றில் 3-வது முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, 

இந்திய ரெயில்வே கடந்த 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 63 ஆயிரத்து 140 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரெயில் பாதை உள்ளது. இந்த துறை நாடு முழுதும் 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை அளித்து வருகிறது. தினமும் 14 ஆயிரத்து 444 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதற்காக 16 லட்சம் ஊழியர்களுடன் இந்திய ரெயில்வே செயல்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ரெயில் துறை இந்திய ரெயில்வே ஆகும். இதன் மூலம் ஆண்டுக்கு 500 கோடி பேர் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். 35 கோடி டன் சரக்குகள் இடம் பெயர்கின்றன. நாளுக்கு நாள் சேவையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரெயில் சேவை கடந்த 22-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரை அதாவது 24 நாட்களுக்கு சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு தலைவர்கள் மறைவுக்காக ஒரு நாட்கள் மட்டும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. அதைத்தவிர ஊழியர்கள் வேலை நிறுத்தம், பந்த் போன்றவற்றுக்காக ஒரு சில மண்டலங்களில் மட்டும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்திய ரெயில்வேயின் 167 ஆண்டு கால வரலாற்றில் 2 சந்தர்ப்பங்களைத் தவிர இந்திய ரெயில்வே தனது பயணிகள் சேவையை ஒரு போதும் நிறுத்தவில்லை. அந்தவகையில் கடந்த 1901-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி விக்டோரியா மகாராணியின் இறுதிச் சடங்கிற்காக இந்திய ரெயில்வே தன்னுடைய சேவையை முதன் முதலாக நிறுத்தியது.

அதனை தொடர்ந்து 1948-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி மகாத்மா காந்தியின் இறுதிச் சடங்கிற்காக 2-வது முறையாக நிறுத்தியது. இப்படி மறைந்த இரண்டு பெரிய தலைவர்களுக்காக இந்திய ரெயில்வே சேவையை நிறுத்தி தன்னுடைய மரியாதையை செலுத்தியது.

தற்போது கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக இந்திய ரெயில்வே பயணிகள் சேவையை 3-வது முறையாக நிறுத்தி உள்ளது. எனினும் 24 நாட்கள் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பது இந்திய ரெயில்வே வரலாற்றில் முதல் முறையாகும். இதற்கு பயணிகள் மிகுந்த ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.

பயணிகள் சேவையை தவிர்த்து, சரக்கு ரெயில்கள் சேவையை தொடர்ந்து இயக்கி வருகிறது. பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை நாடு முழுவதும் கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறது. பயணிகளுக்கு சேவை அளிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், நோய் பரவுவதை தடுக்க இந்த உயரிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததாக எண்ணுகிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story