கொரோனா நோய் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள்


கொரோனா நோய் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 March 2020 12:00 AM GMT (Updated: 25 March 2020 10:39 PM GMT)

கொரோனா நோய் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த சமயத்தில் நான் தமிழக முதல்-அமைச்சராக இல்லாமல், உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள்.

உலகத்தையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ், சீனாவில் தொடங்கி காட்டுத்தீ போல வேகமாக பரவி வருவதை நாம் எல்லோரும் அறிவோம். மத்திய அரசின் வேண்டுகோளின்படி 21 நாட்கள் ஊரடங்கை நாமும் கடைபிடிக்க வேண்டும். இந்த வைரஸ் நோய் எப்படி பரவுகிறது? அதை தடுப்பதற்கு ஒவ்வொருவரும் எப்படி இருக்கவேண்டும்? என்பதை அறிந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாகவும், கைகள் மூலமும் பரவுகிறது. தமிழக அரசு இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. 10 ஆயிரத்து 158 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் உள்ளன. மேலும் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டு உள்ளேன்.

அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. உங்களின் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள், அவர்களாகவே முன்வந்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். அவர்கள் அவ்வாறு செய்ய தவறும்பட்சத்தில், அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ, உறவினர்களோ, பக்கத்து வீட்டார்களோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ, சுகாதாரத்துறைக்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

தனிமைப்படுத்துதல் என்பது உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் சமுதாயத்தையும், நாட்டையும் பாதுகாக்கத்தான். உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைப்போல தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், அரசுக்கு முக்கியம். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த 21 நாட்கள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு என்பதை உணருங்கள். நோய் பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் வெளியூர் செல்வதை தவிருங்கள். பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும், சமுதாயத்தையும் காப்போம். தேவைப்பட்டால் 104 அல்லது 1077 என்ற அரசு உதவி மைய எண்களை தொடர்புகொள்ளலாம்.

விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு. அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் நலன் கருதி அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளை மீறுவோர் மீதும், வீண் வதந்திகளை பரப்புவோர் மீதும், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.க்கள் ஆகியோர் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.

சாதி, மத, இன, மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு கொரோனா நோயில் இருந்து தமிழகத்தை காப்போம். கொரோனா தொற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடி தமிழக மக்கள் அனைவரது நலனையும் காப்போம் என இந்த தருணத்தில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story