கொரோனா தொற்றை எதிர்கொண்டு சமாளிக்கும் பணிகளுக்காக தமிழக அரசுக்கு நன்கொடை அளியுங்கள் - மக்களுக்கு, முதல்-அமைச்சர் வேண்டுகோள்


கொரோனா தொற்றை எதிர்கொண்டு சமாளிக்கும் பணிகளுக்காக தமிழக அரசுக்கு நன்கொடை அளியுங்கள் - மக்களுக்கு, முதல்-அமைச்சர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 27 March 2020 11:00 PM GMT (Updated: 27 March 2020 9:00 PM GMT)

கொரோனா தொற்றை எதிர்கொண்டு சமாளிக்கும் பணிகளுக்காக தமிழக அரசுக்கு நன்கொடை அளியுங்கள் என்று மக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை, 

உலக சுகாதார அமைப்பு கடந்த 11-ந்தேதி கொரோனா வைரஸ் நோயை ஒரு உயிர்க்கொல்லி தொற்று நோய் என்று அறிவித்தது. அதோடு, மக்களின் உயிரை காப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த அழைப்பு விடுத்திருந்தது.

மத்திய அரசும் கொரோனா வைரஸ் நோயை பேரிடராக அறிவித்தது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு 21 நாட்கள் தேசிய அளவிலான ஊரடங்கை பிரதமர் கடந்த 24-ந்தேதி அறிவித்தார்.

எதிர்பார்க்கப்படக்கூடிய, பெரும் எண்ணிக்கையிலான நோய் தொற்று இனங்களை திறம்பட கையாள்வதற்கு, தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையங்கள் ஏற்படுத்துதல், மருத்துவமனைக்கான படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமிநாசினி சாதனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் போன்றவற்றை வழங்குவதற்கு கணிசமான நிதி ஆதாரங்கள் தேவைப்படுகிறது.

மேலும், நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏதுவாக, தனியார் மருத்துவமனைகளையும் கூட ஆயத்தப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வேளாண்மை, கட்டுமானம் மற்றும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர் தினக்கூலி இழப்பை சந்திக்கிறார்கள். ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பதற்கு உதவி தேவைப்படுகிறது.

மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், கொரோனா தொற்றை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளை கருத்தில் கொண்டும், ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இப்பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய் தடுப்பிற்காகவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து தங்கள் பங்களிப்பை அளிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.

அத்தகைய நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(ஜி) ன் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்படும். நன்கொடைகளை மின்னணு மூலம் முன்னுரிமைப்படி வழங்கலாம்.

வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை, பற்று அட்டையின் மூலமாக https://er-e-c-e-ipt.tn.gov.in/cm-p-rf/cm-p-rf.html என்ற இணையதளம் வழியாக செலுத்தி ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.

இ.சி.எஸ். முறை மூலமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம். வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை - தலைமைச் செயலகம், சென்னை - 600 009. சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070. ஐ.எப்.எஸ். கோடு - ஐ.ஓ.பி.ஏ. 0001172, சி.எம்.பி.ஆர்.எப். பான் - ஏ.ஏ.ஏ.ஜி.சி.0038எப்.

இ.சி.எஸ். மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்று சீட்டைப்பெற, பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண் தங்களது முழுமையான முகவரி, இ-மெயில் விவரம் ஆகிய தகவல்களைக் குறிப்பிட வேண்டும்.

வெளிநாடு வாழ் மக்களிடமிருந்து நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது. வெளிநாடு வாழ் மக்கள் ஸ்விப்ட் கோடை பின்பற்ற வேண்டும். IO-B-A-I-N-BB001 In-d-i-an Ov-e-rs-eas Ba-nk, Ce-nt-r-al Of-f-i-ce, Ch-e-n-n-ai என்பதாகும்.

மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, அரசு துணை செயலாளர் மற்றும் பொருளாளர், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமை செயலகம், சென்னை -600 009, தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் dsp-ay-c-e-ll.fi-n-dpt@tn.gov.in என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

தற்போதைய நிலையில், நேரடியாக முதல்-அமைச்சரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்க இயலாது. என்றாலும், ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதியுதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story