தமிழகத்தில் கொரோனா தீவிரமடைகிறதா? 51 ஆயிரம் படுக்கை வசதியுடன் 825 புதிய கட்டிடங்கள் தயார் - அரசு உடனடி ஏற்பாடு


தமிழகத்தில் கொரோனா தீவிரமடைகிறதா? 51 ஆயிரம் படுக்கை வசதியுடன் 825 புதிய கட்டிடங்கள் தயார் - அரசு உடனடி ஏற்பாடு
x
தினத்தந்தி 2 April 2020 4:45 AM IST (Updated: 2 April 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 825 புதிய கட்டிடங்களில் 51 ஆயிரம் படுக்கை வசதிகளை அரசு உடனடியாக ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடையலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. எனவே கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்குவதற்காக தமிழகம் முழுவதும் 825 புதிய அரசு கட்டிடங்களை அரசு தயார் நிலையில் வைத்துள்ளது.

இதற்காக தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள புதிய அரசு கட்டிடங்களை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த விவரங்கள் நேற்று வெளியாகின.

அதன் அடிப்படையில் 35 மாவட்டங்களில் உள்ள 825 அரசின் புதிய கட்டிடங்களில் 50 ஆயிரத்து 852 படுக்கைகள் அமைத்துக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்னும் கட்டிடங்கள் தேர்வு செய்யப்படவில்லை.

சென்னை மாவட்டத்தில் 7 கட்டிடங்களில் (60 ஆயிரத்து 707 சதுரமீட்டர் அளவு) 3,702 படுக்கைகளும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 கட்டிடங்களில் (2,866 சதுரமீட்டர்) 66 படுக்கைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 அரசுக் கட்டிடங்களில் (5,796 சதுரமீட்டர்) 480 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.

ஆக மொத்தத்தில், தமிழகத்தின் 35 மாவட்டங்களில் 825 அரசு புதிய கட்டிடங்களில் 14 லட்சத்து 6 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் 50 ஆயிரத்து 852 படுக்கை வசதிகளை ஏற்படுத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவை பொதுப் பணித்துறையால் கட்டப்பட்ட கட்டிடங்களாகும்.

Next Story