தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள்: மின்சார கட்டணம் செலுத்த எளிய வழி


தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள்: மின்சார கட்டணம் செலுத்த எளிய வழி
x
தினத்தந்தி 22 April 2020 9:45 PM GMT (Updated: 22 April 2020 8:23 PM GMT)

தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின்நுகர்வோர்கள் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு மின்சார வாரியம் எளிய வழியை அறிவித்து உத்தரவை பிறப்பித்து உள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவுதலால் கடந்த மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டணம், கடந்த மாதம் 22-ந்தேதியில் இருந்து வருகிற 30-ந்தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள், அதற்கு முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி மின்கட்டணம் செலுத்தலாம்.

இவ்வாறு செலுத்திய மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும். அதாவது கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையையே ஏப்ரல் மாத மின்கட்டணமாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு அமல்படுத்தியதால், தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர்கள், முதல்-அமைச்சரிடம் வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் கதவடைப்பு மற்றும் மின் உபயோகமின்மை காரணத்தால் முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்துவது என்பது தற்போதைய மின்நுகர்வின் அடிப்படையில் எழும் கட்டணத்தைவிட அதிகமாக உள்ளது என முறையிட்டனர்.

இந்த முறையீட்டினை பரிசீலித்து முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி, மின்சார வாரிய துறை அமைச்சர் தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின்நுகர்வோர்களின் மின்கட்டணத்தை திருத்தி எளிய வழியை அறிவித்து உள்ளார்.

அதன்படி, தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின்நுகர்வோர்கள் தங்களது மின்னிணைப்பு மின் அளவியிலுள்ள மின் அளவீட்டினை குறுஞ்செய்தி, வாட்ஸ்-ஆப், மின்னஞ்சல் மூலமாக எழுத்து அல்லது புகைப்பட வடிவில் தங்களது மின் இணைப்பு சார்ந்த பிரிவு அலுவலகத்தின் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளருக்கு தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தின் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளரின் அலுவலக செல்போன் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை www.tan-g-e-d-co.govi.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மின் அளவீடு பெறப்பட்டவுடன் மின்கட்டணத்தினை திருத்தியமைத்து அதன் விவரங்களை பிரிவு அலுவலர்கள் நுகர்வோருக்கு தகவல் பெறப்பட்ட முறையிலேயே தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

தாழ்வழுத்த பயனீட்டாளர்களுக்கு கட்டணம் செலுத்த ஏற்கனவே வழங்கியுள்ள இணையதள வழிகளான வலைதள வங்கியியல், தொலைபேசி வங்கியியல், பேமண்ட், கேட்வே உள்ளிட்டவற்றின் மூலம் கட்டணம் செலுத்தி மின்கட்டண கவுண்ட்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணக்கீடு முறைகள் தாழ்வழுத்த வீடு மற்றும் பிற மின்நுகர்வோர்களுக்கு பொருந்தாது. இது வருகிற 3-ந்தேதி வரை மட்டுமே பொருந்தும்.

மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story