சென்னையில் 2-வது நாளாக ஆய்வு: அரசு ஆஸ்பத்திரிகளை பார்வையிட்ட மத்திய குழு - கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் சென்றனர்


சென்னையில் 2-வது நாளாக ஆய்வு: அரசு ஆஸ்பத்திரிகளை பார்வையிட்ட மத்திய குழு - கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் சென்றனர்
x
தினத்தந்தி 26 April 2020 10:00 PM GMT (Updated: 26 April 2020 7:52 PM GMT)

சென்னையில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் கோயம்பேடு மார்க்கெட், அரசு ஆஸ்பத்திரிகளில் நேரில் சென்று பார்வையிட்டனர்.

சென்னை, 

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் (‘ஹாட்ஸ்பாட்’) ஒன்றாக சென்னை உள்ளது. இதனால், சென்னையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதற்கான காரணம் என்ன? ஊரடங்கு உத்தரவு எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலாளர் வி.திருப்புகழ் தலைமையிலான 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் டெல்லியில் இருந்து கடந்த 24-ந் தேதி இரவு சென்னை வந்தனர்.

இந்த குழுவினர் நேற்று காலை 10 மணிக்கு சென்னை எழிலகத்தின் 5-வது மாடியில் புதிதாக ரூ.1 கோடி மதிப்பில் எச்.சி.எல். நிறுவனத்துடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துணை இணைந்து அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை தரவு பகுப்பாய்வு மையத்தை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து எழிலக வளாகத்தில் உள்ள 1070 என்ற கொரோனா தடுப்பு உதவி எண்ணுடன் இயங்கி வரும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர், தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலாளர் வி.திருப்புகழ் தலைமையில் பேராசிரியர் சூரியபிரகாஷ், லோகேந்தர் சிங் ஆகியோர் ஒரு குழுவாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை நேரில் சென்று பார்வையிட்டனர். அவர்களுடன், வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜகந்நாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மேலாண்மை உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோரும் உடன் சென்றனர்.

கோயம்பேடு அங்காடி நிர்வாக குழுவின் நடமாடும் காய்கனி விற்பனை வாகனத்தை பார்வையிட்டனர். அதில் வைக்கப்பட்டு இருந்த தராசு சரியாக இயங்குகிறதா? என்பதை பார்த்தனர். மார்க்கெட்டில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து திருப்புகழ் ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டுக்கு சென்ற திருப்புகழ் அங்கு நின்று கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த வெங்காய லாரி டிரைவர் ஒருவரிடம் எங்கிருந்து வெங்காயம் வருகிறது. கொரோனா தொற்று தடுப்புக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்காக இருக்கிறதா? என்பது குறித்து விசாரித்தார். அதைத் தொடர்ந்து வெங்காய கடை ஒன்றிற்கு சென்ற அவர் வெங்காயத்தின் விலையை கேட்டறிந்தார்.

கோயம்பேடு மார்க்கெட்டை பார்வையிட்டு முடித்த உடன் விருகம்பாக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு உணவு அருந்தி கொண்டு இருந்தவர்களிடம் எத்தனை நாட்களாக இங்கு உணவருந்துகிறீர்கள் என்று கேட்டார். அவருக்கு பதில் அளித்த தனியார் காவல் தொழிலாளி ஒருவர் தான் தொடர்ந்து 3 வேளையும் இங்கேயே உணவு சாப்பிடுவதாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அம்மா உணவகத்தின் கண்காணிப்பாளரிடம் மொத்தம் எத்தனை பேருக்கு சாப்பாடு வழங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு 200 சாப்பாடு தயார் செய்யப்படுவதாக அவர் பதில் அளித்தார்.

பின்னர், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநில பேரிடர் நிதியில் சென்னை மாநகராட்சியால் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 532 அறைகளை திருப்புகழ் பார்வையிட்டார். நங்கநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும், பாதுகாப்பு மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். பின்னர் சென்னை துறைமுகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதே போன்று, சப்தர்ஜங் ஆஸ்பத்திரி மற்றும் வி.எம்.எம்.சி. பேராசிரியர் டாக்டர் அனிதா கோகர் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மை செயல் அலுவலர் (ஐ.வி.சி.) டாக்டர் வி.விஜயன் ஆகியோரை கொண்ட மற்றொரு குழுவினர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

Next Story