பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
x
தினத்தந்தி 5 May 2020 1:18 AM IST (Updated: 5 May 2020 1:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 40 நாட்களாக மக்கள் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தமிழக அரசு தனது வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி அரசாணை வெளியிட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இது சாதாரண ஏழை-எளிய மக் களை பாதிக்கக்கூடியதாகும். எனவே மதிப்பு கூட்டு வரி உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.:-

கொரோனா பேரிடர் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சீரழித்து சிதைத்துள்ள நேரத்தில் மத்திய அரசு போலவே தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. கொரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைக்கும் போது தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவது அக்கிரமம் ஆகும். எனவே தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கு அறிவித்துள்ள மதிப்புக்கூட்டு வரி உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் வெகுவாக சரிந்து வரும் நிலையில் நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் கணிசமான அளவுக்கு குறையவேண்டும். ஆனால் அதற்கு பதிலாக வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் மத்திய, மாநில அரசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு பெட்ரோல், டீசல் மீது வரி விதிப்பது கண்டனத்துக்குரியது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வரும் மக்கள் மீது மேலும் இத்தகைய வரி விதிப்பினை கைவிடவேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.:-

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக மக்கள் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த சூழலில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் அத்தியாவசிய பண்டங்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, திணறிக்கொண்டிருக்கும் மக்கள் மீது இப்படி வரிச்சுமையை ஏற்றுவதை கைவிட வேண்டும். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்:-

உலகம் எங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.

இதேபோல தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story