மதுபானங்கள் விலை உயர்வு - குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்தது


மதுபானங்கள் விலை உயர்வு - குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்தது
x
தினத்தந்தி 7 May 2020 4:00 AM IST (Updated: 7 May 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்ந்தது.

சென்னை, 

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கட்டத்தில் சுமார் 40 நாட்கள் மதுபான கடைகளும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தன. இதனால் குடிமகன்கள் மது அருந்த முடியாமல் திக்கு முக்காடினார்கள்.

மதுக்கடைகளை திறப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும்? என்று எதிர்நோக்கி காத்திருந்தார்கள். அதே சமயத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்று இல்லத்தரசிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்தநிலையில் டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மடை திறந்த வெள்ளம் போல குடிமகன்கள் மதுக்கடைகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே சென்னையை தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுபான கடைகளில் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் குடிமகன்களை வரிசையில் நிற்க வைப்பதற்கான தடுப்புகள், வட்டங்கள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் மதுபானங்களின் விலை உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சாதாரண மதுபானங்களின் குவார்ட்டர் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10-ம், நடுத்தர மற்றும் பிரீமியம் வகைகளை சேர்ந்த மதுபானங்களின் குவார்ட்டர் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.20-ம் உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்த்தப்படும் பட்சத்தில் சாதாரண மதுபானங் களில் ‘ஆப்’புக்கு ரூ.20-ம், ‘புல்’லுக்கு ரூ.40-ம் உயர்ந்துள்ளது. இதேபோல நடுத்தர மற்றும் பிரீமியம் வகைகளை சேர்ந்த மதுபானங்களில் ‘ஆப்’புக்கு ரூ.40-ம், ‘புல்’லுக்கு ரூ.80-ம் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மதுபானங்களின் விலை உயர்வின் மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த காரணத்தினால் சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ரூ.10 கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ரூ.20 கூடுதலாகவும் 7-ந் தேதி (இன்று) முதல் உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுபானங்களுக்கு கடந்த 3 மாதத்தில் 2-வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது.

பல நாட்களுக்கு பின்னர் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதால், குடிமகன்கள் படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை அறிவித்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story