பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ‘வாட்ஸ்-அப் குருப்’ ஊரடங்கின்போது குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்


பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ‘வாட்ஸ்-அப் குருப்’ ஊரடங்கின்போது குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 20 May 2020 11:15 PM GMT (Updated: 20 May 2020 9:07 PM GMT)

தமிழகத்தில் ஊரடங்கின் போது குடும்ப வன்முறை தொடர்பாக 616 வந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக உதவ அதிகாரிகள் உறுப்பினர்களாக கொண்ட ‘தாய்வீடு’ என்ற வாட்ஸ்-அப் குரூப் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சுதா ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால், கணவன், மனைவி அதிக நேரம் வீட்டில் உள்ளனர். இதனால், பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து பெண்கள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனவே, குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் செல்போன் நம்பரை பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளர் எஸ்.மதுமதி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு மாவட்ட அளவில் உள்ள குறைதீர்வு அதிகாரிகளின் தொலைபேசி விவரங்களை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர சமூகநலத்துறை ஒருங்கிணைந்து செயல்படுத்தும் உதவி தொலைப்பேசி எண் 181 மற்றும் காவல்துறை, பேரிடர் மேலாண்மை மையம், மாநில பெண்கள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் தொடர்பு எண்கள் (1091, 100, 112) அறிவிக்கப்பட்டுள்ளன.

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் மற்றும் மருத்துவ ரீதியான சிகிச்சை, தற்காலிகமாக தங்கும் இடம். உணவு மற்றும் இலவச சட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

கிராமப்புறங்களை பொறுத்தவரை, குடும்ப வன்முறை சம்பவத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அங்கன்வாடி பெண் ஊழியர்கள் மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன.

அங்கன்வாடி பெண் ஊழியர்கள், கிராம பெண்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள். இந்த ஊழியர்களின் செல்போன் நம்பர் பெண்கள் அதிகம் பேர் வைத்திருப்பார்கள். எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் எளிதில் இவர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க முடியும். அவ்வாறு புகார் வந்ததும், அதை உடனடியாக மாவட்ட சமூக நல அதிகாரிக்கு, அங்கன்வாடி ஊழியர்கள் தகவல் தெரிவித்து விடுவார்கள்.

ஊரடங்கு காலங்களில், தமிழகத்தில் மார்ச் 24-ந்தேதி முதல் மே 14-ந்தேதி வரை குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் வந்துள்ளன. இதுதவிர தற்காலிக அடிப்படையில் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்ட 111 பாதுகாப்பு அதிகாரிகளின் செல்போன் நம்பர்களுக்கும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. புகார் வந்ததும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக அனைத்து உதவிகளைகளும் செய்யப்படுகின்றன.

இதுதவிர குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக உதவிகள் செய்யும் விதமாக, ‘தாய் வீடு’ என்ற வாட்ஸ்-அப் குரூப் தொடங்கப்பட்டுள்ளன. இதில் சமூகநலத்துறை செயலாளர், ஆணையர், அனைத்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், குடும்ப வன்முறை பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டோர் உறுப்பினராக உள்ளனர். எனவே, குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அனைத்து உதவிகளும் உடனுக்குடன் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கை வருகிற ஜூன் 5-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story