பல்கலைக்கழக காலியிடங்களில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது உயர்கல்வித் துறை உத்தரவு


பல்கலைக்கழக காலியிடங்களில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது உயர்கல்வித் துறை உத்தரவு
x
தினத்தந்தி 23 May 2020 9:45 PM GMT (Updated: 23 May 2020 9:22 PM GMT)

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள இடங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது என்று உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் தங்களின் பணிக்காலம் முடிந்ததும், கெளரவ விரிவுரையாளர்கள், தற்காலிக விரிவுரையாளர்கள் என்று பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

பல்கலைக்கழகங்களின் விருப்பத்தின் பேரில் கெளரவ விரிவுரையாளர்களாக ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு வரும்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியமர்த்த தடைவிதித்து, உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் அபூர்வா, உயர்கல்வி துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள கற்பித்தல் பதவிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியமர்த்த சில பல்கலைக்கழகங்கள் முடிவு செய்து இருக்கின்றன. இது தகுதியான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு இடையூறாக இருக்கும்.

எனவே, பல்கலைக்கழகங்கள் காலியாக உள்ள கற்பித்தல் பதவிகளில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை ஆலோசகர்களாக நியமித்ததற்கு, பல்வேறு பேராசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story