மாநில செய்திகள்

அரசு காப்பீடு அட்டை: தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு வசூலிக்கலாம்? - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் + "||" + For government insurance card holders Private Hospitals For the treatment of corona How much you can charge Information by Minister Vijayabaskar

அரசு காப்பீடு அட்டை: தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு வசூலிக்கலாம்? - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

அரசு காப்பீடு அட்டை:  தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு வசூலிக்கலாம்? - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனா தொற்று சிகிச்சை பெற அரசு காப்பீடு அட்டை வைத்திருப்பவருக்கு தனியார் மருத்துவமனையில் எவ்வளவு கட்டணம்? என்பது பற்றி அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.


கொரோனா சிகிச்சைக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனியார் மருத்துவமனைக்கு தமிழக அரசால் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும், ஒரு சில நிபந்தனைகளுடன் கூடிய தனது அறிக்கையை அளித்தது. அதை நன்கு பரிசிலித்த தமிழக அரசு, கட்டணங்களை நிர்ணயித்து ஒப்புதல் அளித்தது.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து சேவைகளுக்குமான தொகுப்பு கட்டணத்தின் விவரம் வருமாறு:-

நாள் ஒன்றுக்கு அனைத்து சேவைகளுக்குமான அதிகபட்ச தொகுப்புக்கட்டணம், பொது வார்டில் உள்ள அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் இருக்கக்கூடிய நபர்களுக்கு (கிரேட்ஏ1, ஏ2) ரூ.5 ஆயிரம். அதுபோல அங்கு கிரேட்ஏ3, ஏ4-க்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பு கட்டணமாகும்.

அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டணம் (ஏ1, ஏ2) ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம். கிரேட் ஏ3 மற்றும் ஏ4-க்கு கட்டணம் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரத்து 500.

அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக் கோரும் மருத்துவமனைகளின் மீது முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இதுதொடர்பான மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும்.

இந்த புதிய அறிவிப்பு, தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்து பயன் பெறத் தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும். முதல்-அமைச்சரால் எடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளால், கொரோனா சிகிச்சை முறைகளை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் ‘தினத்தந்தி‘ நிருபர் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்போர் எத்தனை பேர்?

பதில்:- தமிழகத்தில் 2 கோடியே ஒரு லட்சம் ரேஷன் அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) உள்ளன. அதில், ஒரு கோடியே 58 லட்சம் பேரிடம் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை உள்ளது.

கேள்வி:- இப்போது நீங்கள் அறிவித்த தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம், முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பொருந்துமா? அல்லது எல்லாருக்கும் பொதுவானதா?

பதில்:- நான் அறிவித்துள்ள இந்த கட்டணம், முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் இதிலேயே மொத்த குடும்பங்களில் ஏறத்தாழ 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான குடும்பங்கள் பயன்பெற முடியும். மீதமுள்ள அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் பொதுமக்கள் மற்றும் பொருளாதாரரீதியாக வசதி படைத்த மக்களுக்கு இது பொருந்தாது. மற்றவர்களுக்கு கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது இன்று அறிவிக்கப்படும்.

கேள்வி:- நீங்கள் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்காக அறிவித்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறதா?

பதில்:- ஆம். உடனடியாக அமலுக்கு வருகிறது.

கேள்வி: தமிழ்நாட்டில் எத்தனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை நடைபெற்று வருகிறது?

பதில்:- 262 அரசு மருத்துவமனைகளிலும், 763 தனியார் மருத்துவமனைகளிலும் சேர்த்து தமிழகத்தில் 1,025 மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.