கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. மரணம்:சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி உடல் அடக்கம்


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. மரணம்:சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி உடல் அடக்கம்
x
தினத்தந்தி 11 Jun 2020 6:00 AM IST (Updated: 11 Jun 2020 3:09 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நேற்று மரணம் அடைந்தார். சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னை, 

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்.

கொரோனாவுக்கு சிகிச்சை

62 வயதான இவர் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த 2-ந் தேதி இரவு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் மூச்சு திணறலால் அவதிப்பட்டதால் உடனடியாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே, அவர் கல்லீரல் அறுவை சிகிச்சைசெய்து இருந்ததால், அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்ததால், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெ.அன்பழகனுக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

வீட்டில் உள்ள அவரது மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைவரும் சிகிச்சை மேற்கொண்டனர்.

வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன்

இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி காலை ஜெ.அன்பழகனின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர்களிடம் சிகிச்சை முறை குறித்து விசாரித்ததுடன், ஜெ.அன்பழகன் பூரண நலம் பெற்று திரும்ப தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இதே கருத்தை கூறி இருந்தார்.

ஜெ.அன்பழகன் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் அளவில் 90 சதவீதம் வென்டிலேட்டர் மூலமே அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 7-ந்தேதி அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், அவருக்கு வென்டிலேட்டர் மூலம் அளிக்கப்பட்ட ஆக்சிஜன் அளவு 40 சதவீதமாக குறைக்கப்பட்டது.

ஜெ.அன்பழகன் மரணம்

இந்த நிலையில், 8-ந் தேதி மாலை திடீரென ஜெ.அன்பழகனின் உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். என்றாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை 8.05 மணிக்கு ஜெ.அன்பழகன் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து, ரேலா ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கடுமையான கொரோனா காரணமாக உயிருக்கு போராடிய ஜெ.அன்பழகனின் உடல்நிலை இன்று (நேற்று) அதிகாலை மோசம் அடைந்தது. எங்களது கொரோனா சிகிச்சை மையத்தில் மெக்கானிக்கல் வென்டிலேஷன் உள்பட முழு மருத்துவ உதவி அளித்தும் பலன் அளிக்கவில்லை” என்று கூறப்பட்டு இருந்தது.

மு.க.ஸ்டாலின் ஆறுதல்

ஜெ.அன்பழகன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, வர்த்தக அணி துணைச் செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.

கொரோனா நோய் தொற்றால் ஜெ.அன்பழகன் மரணம் அடைந்ததால், யாரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

உடல் அடக்கம்

பாதுகாப்பாக அவரது உடலை அடக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகளிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் ஆம்புலன்ஸ் வேன் மூலம் ஜெ.அன்பழகனின் உடல் சென்னை தியாகராயநகர் மகாலட்சுமி தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வீட்டு வாசலிலேயே 2 நிமிடம் நிறுத்தப்பட்டு, குடும்ப உறுப்பினர்கள் மட்டும் உடலை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் கண்ணம்மாபேட்டை இடுகாட்டுக்கு ஜெ.அன்பழகனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அவரது தந்தை ஜெயராமன், தாய் பூரணி அம்மாள் கல்லறை அருகே, சுகாதாரதுறை வழிகாட்டுதலின்படி பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

பழக்கடை ஜெயராமனின் மகன்

மரணம் அடைந்த ஜெ.அன்பழகன் முதன் முதலாக கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சென்னை தியாகராயநகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வெங்கமூர் கிராமம்தான் ஜெ.அன்பழகனின் சொந்த ஊர் ஆகும். இவர் தியாகராயநகர் பகுதி தி.மு.க. செயலாளராக இருந்த பழக்கடை ஜெயராமனின் மகன் ஆவார். இவருக்கும் அவரது தந்தையைப்போலவே கட்சியில் செல்வாக்கு இருந்தது.

தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் பணியில் ஜெ.அன்பழகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். கடந்த சில வாரங்களாக முழு மூச்சாக அந்த பணியிலேயே அவர் ஈடுபட்டு வந்தார்.

பிறந்த நாளில் இறந்தார்

கடந்த 3-ந் தேதி மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால், அதை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஜெ.அன்பழகன் ஏற்பாடு செய்து வந்தார். அதற்குள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுமாறு கூறினார்.

இருந்தாலும், ஜெ.அன்பழகன் கடந்த 2-ந் தேதி இரவு நேராக ஆஸ்பத்திரிக்கு செல்லாமல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து நேராக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற தொடங்கினார். இந்த நிலையில்தான் நேற்று காலை அவர் மரணம் அடைந்தார். நேற்று அவருக்கு 62-வது வயது பிறந்தது. கடைசியில் பிறந்தநாளிலேயே அவர் இறந்த சோகம் நடந்து உள்ளது.

ஜெ.அன்பழகன் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அவரது தயாரிப்பில், 2013-ம் ஆண்டு ‘ஆதிபகவன்’, ‘யாருடா மகேஷ்’ ஆகிய படங்கள் வெளிவந்தன.

காலி இடங்கள்3 ஆக அதிகரிப்பு

ஜெ.அன்பழகனின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது. ஏற்கனவே, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி (திருவொற்றியூர் தொகுதி), காத்தவராயன் (குடியாத்தம் தொகுதி) ஆகிய இருவரும் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்ததால், அந்த தொகுதிகள் காலியாக உள்ளன. தற்போது, சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 97 ஆக குறைந்து உள்ளது.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெ.அன்பழகன் 67,982 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.நூர்ஜகான் 53,818 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தாமரை கஜேந்திரன் 6,281 வாக்குகளும், தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வி.அப்துல்லா சேட் 5,507 வாக்குகளும், பா.ம.க. சார்பில் போட்டியிட்ட கசாலி 2,511 வாக்குகளும் பெற்றனர்.

Next Story