தொடர்ந்து உச்சம் பெட்ரோல் விலை ரூ.80-ஐ தொட்டது பொதுமக்கள் அதிருப்தி


தொடர்ந்து உச்சம் பெட்ரோல் விலை ரூ.80-ஐ தொட்டது பொதுமக்கள் அதிருப்தி
x
தினத்தந்தி 17 Jun 2020 12:00 AM GMT (Updated: 16 Jun 2020 7:43 PM GMT)

தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து, நேற்று ஒரு லிட்டர் ரூ.80-ஐ தொட்டது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காலம், கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகிய காரணங்களினால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. அதன்பிறகு, கடந்த 7-ந்தேதி அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தின. 7-ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து கொண்டே வந்தது.

தினமும் 50 காசு என்ற வீதத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து வந்த நிலையில், நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 41 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 80 ரூபாய் 37 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 48 காசு உயர்ந்து 73 ரூபாய் 17 காசுக்கும் விற்பனை ஆனது.

தொடர்ந்து உச்சம்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. இதில் பெட்ரோல் நேற்று ரூ.80-ஐ தாண்டி இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ரூ.80-ஐ தொட்டு இருந்தது.

அந்த சமயத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருந்தது. தேவையும் அதிகமாக இருந்தது. இந்த காரணங்களினால் விலை உயர்ந்து காணப்பட்டது. தொடர்ந்து உச்சத்தை நோக்கி சென்று அதே ஆண்டில் அக்டோபர் மாதம் 4-ந்தேதி ரூ.87 வரை சென்றது. அதன்பின்னர், சகஜ நிலைக்கு திரும்பி நவம்பர் மாதம் 17-ந்தேதிக்கு பிறகு ரூ.80-க்கு கீழ் சென்றது.

ஒரு லிட்டர் ரூ.80-ஐ தொட்டது

அதன்பின், 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெட்ரோல் விலை ரூ.80-ஐ தொட்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தும் என்ன காரணத்துக்காக அதன் விலை உயருகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது என பொதுமக்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

ஒவ்வொரு எண்ணெய் நிறுவனங்களும் தங்களுடைய சேவைகள் குறித்து வெளிப்படைத்தன்மையை காட்டும் இதே நேரத்தில், விலை உயர்வு குறித்தும் வெளிப்படைத்தன்மையை அவர்கள் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் என்றும் பொதுமக்கள் தங்களுடைய கருத்தை பதிவு செய்துள்ளனர்.

Next Story