மாநில செய்திகள்

சிறையில் இருந்த சாத்தான்குளம் தந்தை-மகன் சாவு: “விசாரணையை தீவிரமாக கண்காணிப்போம்”மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு உத்தரவு + "||" + Death of father-son duo sparks outrage in TN; HC seeks report

சிறையில் இருந்த சாத்தான்குளம் தந்தை-மகன் சாவு: “விசாரணையை தீவிரமாக கண்காணிப்போம்”மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு உத்தரவு

சிறையில் இருந்த சாத்தான்குளம் தந்தை-மகன் சாவு: “விசாரணையை தீவிரமாக கண்காணிப்போம்”மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு உத்தரவு
“சிறையில் இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் சாவு குறித்த வழக்கு விசாரணையை தீவிரமாக கண்காணிப்போம்” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மதுரை, 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அங்குள்ள மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். இந்த கடையில் அவரது மகன் பென்னிக்சும் இருந்து வந்துள்ளார்.

கடந்த 19-ந்தேதி இரவு ஜெயராஜிடம் போலீசார் கடையை அடைக்கச் சொல்லியதாகவும், இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தசம்பவத்தை தொடர்ந்து ஜெயராஜ் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த தகவல் அறிந்ததும் அவரது மகன் பென்னிக்ஸ் அங்கு சென்றுள்ளார். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இரவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பென்னிக்ஸ் இறந்துவிட்டார். மறுநாள் அதிகாலையில் அவரது தந்தை ஜெயராஜூம் இறந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், போராட்டம், கடையடைப்பு நடத்தப்பட்டன.

இதற்கிடையே உயிரிழந்த தந்தை-மகன் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும், 3 டாக்டர்களுக்கு குறையாமல் உள்ள மருத்துவ குழுதான் பிரேத பரிசோதனையை நடத்த வேண்டும் என்று உத்தரவிடக்கோரி ஜெயராஜின் மனைவி செல்வராணி மதுரை ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் அவசர வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், “செல்போன் கடையில் இருந்த ஜெயராஜை போலீசார் வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட எனது மகனையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். உடலில் ஏற்பட்ட படுகாயங்களால்தான் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்துள்ளனர்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, “மனுதாரரின் கணவர், மகனின் உடல்களை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், பரிசோதனை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும், மனுதாரரின் கணவர், மகன் இறந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த நிர்வாக நீதிபதி அடங்கிய டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்படுகிறது” என உத்தரவிட்டார்.

அதன்படி செல்வராணி தாக்கல் செய்த வழக்கு, மதுரை ஐகோர்ட்டு தாமாக பதிவு செய்த வழக்கு ஆகியவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று காலை 10.30 மணி அளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “விசாரணைக்காக போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படும் கைதிகள் இறப்பது அடிக்கடி நடக்கிறது. இதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பது இந்த கோர்ட்டின் நோக்கம்” என்றனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையில் தமிழக டி.ஜி.பி., தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக வேண்டும். இதற்காக விசாரணை பகல் 12.30 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பகல் 12.30 மணி அளவில் மீண்டும் இந்த வழக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, டி.ஜி.பி. மற்றொரு கூட்டத்தில் பங்கேற்றதால் அவருக்கு பதிலாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் ஆஜரானார். மேலும், தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், கூடுதல் அரசு வக்கீல் ஆனந்தராஜ், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், செல்வராணி சார்பில் வக்கீல் பி.எம்.விஷ்னுவர்த்தனன் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது நீதிபதிகள், “சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் இறப்பு தொடர்பான தற்போதைய நடவடிக்கை என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் சார்பில், “தந்தை-மகன் இறந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய ஏட்டுகள் முருகன், முத்துராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “இறந்தவர்களின் உடல்களை மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்பேரில், 3 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு எந்த தடையும் இன்றி விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும். விசாரணையில் எந்த குறுக்கீடும் இருக்கக்கூடாது. அவர் அனைத்து சாட்சிகளிடமும் விசாரித்த தகவல் மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளுடன் கூடிய அறிக்கையை வருகிற 26-ந்தேதி மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

இறந்தவர்களின் இறுதிச்சடங்கின்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை இந்த கோர்ட்டு தீவிரமாக கண்காணிக்கும்” என்று நீதிபதிகள் பரபரப்பு உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை வருகிற 26-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பின்னர், “கொரோனா வைரசால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் பொதுமக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது தடுக்கப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்“ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா
நடிகர் சுஷாந்த் சிங் எழுதியதாக கூறப்படும் நன்றிகடன் பட்டவர்கள் பட்டியலை நடிகை ரியா சக்கரபோர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
2. வேலூரில் பெண் டாக்டர் மர்மச்சாவு போலீசார் விசாரணை
வேலூரில் பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
பணகுடியில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. விளையாட செல்போன் கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
விளையாட தனது அண்ணன் செல்போன் கொடுக்காததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பண மோசடி நடிகை ரியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் ரூ.15 கோடி பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக அவரது தந்தை அளித்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை நடத்தியது.