சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து சோதனை நடத்துகிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்


சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து சோதனை நடத்துகிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 27 Jun 2020 11:30 AM GMT (Updated: 27 Jun 2020 11:30 AM GMT)

சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து சோதனை நடத்துகிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 49,690 ஆக உள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை  மூலக்கடையில் உள்ள மருத்துவ முகாமை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:-

"தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 56% பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவற்றை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 1,974 குடிசைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து சோதனை நடத்துகிறோம். தொற்று உள்ளவர்களை கண்டறிந்தபின் தொடர்பு உடையவர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கும் ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என பரிசோதிக்கப்படுகின்றன. 

சென்னையில் நிறைய 'கோவிட் கேர் சென்டர்' அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்"

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story